தெள்ளிப்பளை மகாஜனக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கு இடையிலான 21வது வீரர்களின் பெரும் சமர் சமனிலையில் முடிவடைந்துள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முன்னிலையை பெற்றிருந்தபோதும், மகாஜனக் கல்லூரியின் அற்புதமான இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் உதவியுடன் போட்டி சமனிலைப்படுத்தப்பட்டது.
21வது வீரர்களின் சமரில் ஸ்கந்தவரோதயா கல்லூரி முன்னிலையில்!
ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மகாஜனக் கல்லூரிக்கு வழங்கியது.
அதன்படி களமிறங்கிய மகாஜனாக் கல்லூரியின் முதல் இலக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மத்தியவரிசையில் சூரியகுமார் சுமிஷ்கரன் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு அடுத்தப்படியாக தர்மராசா அபிசாந்த் 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களை கடக்கவில்லை.
ஸ்கந்தவரோதயா அணியின் பந்துவீச்சில் லவன் கஜனன் 4 விக்கெட்டுகளையும், கேதிஷ்வரன் நிதுசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற 46.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மகாஜனக் கல்லூரி பெற்றுக்கொண்டது.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஸ்கந்தவரோதயா அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிவானந்தன் வசீகரன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
எனினும் துரதிஷ்டவசமாக அரைச்சதத்தை தவறவிட்ட இவர் 43 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவரின் துடுப்பாட்டத்தைக் கடந்து தடுமாறத்தொடங்கிய ஸ்கந்தவரோதயா அணிக்கு மத்தியவரிசையில் மகாலிங்கம் பிரணவன் 22 ஓட்டங்களை பெற்று சற்று ஆறுதல் அளித்தாலும், மீண்டும் துடுப்பாட்டம் வலுவிழக்கத் தொடங்கியது.
எனினும் நிரஞ்சன் ஸ்டீபன் 42 ஓட்டங்களையும், சுதாகரன் கேதுசன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, முதல் இன்னிங்ஸில் ஸ்கந்தவரோதயா கல்லூரி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் துவாரகன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மகாஜனக் கல்லூரி அணிக்கு சந்திரசேகரன் அபர்ணன் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
அரைச்சதத்தை கடந்த இவர் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுவளிக்க, மத்தியவரிசை சற்று வீழ்ச்சிக்கண்டது. எனினும் பந்துவீச்சில் அசத்திய கிருபாரத்னம் துவாரகன் துடுப்பாட்டத்திலும் அற்புதமான பிரகாசிப்பை வெளிப்படுத்தினார்.
இவர் 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, ஆட்டநேர இறுதியில் மகாஜனக் கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனவே, இரண்டு நாட்கள் கொண்ட இந்தப்போட்டி சமனிலையில் முடிவடைந்தது. பந்துவீச்சில் லவன் கஜன் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினார்.
மகாஜனக் கல்லூரி – 107/10 (46.2), சுமிஷ்கரன் 32, கஜனன் 20/4, நிதுசன் 13/3
ஸ்கந்தவரோதயா கல்லூரி – 181/10 (81.5), வசீகரன் 43, ஸ்டீபன் 42, துவாரகன் 33/6
மகாஜனக் கல்லூரி – 223/7 (65), அபர்ணன் 81, துவாரகன் 50*, கஜன் 74/3
முடிவு – போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<