ஆர்ஜன்டீனா மற்றும் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிகளின் நட்சத்திர வீரர் லியொனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வென்றார்.
பரிஸில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற விருது விழாவில் கிலியன் ம்பாப்பே மற்றும் கரிம் பென்சிமாவை பின்தள்ளியே 35 வயதான மெஸ்ஸி இந்த விருதை வென்றுள்ளார்.
- அதிருப்தியுடன் ஸ்பெயினுக்கு விடை கொடுக்கும் ராமோஸ்
- துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த செல்சி முன்னாள் வீரர்
- இலங்கை கால்பந்துக்கு FIFA தடை
கடந்த ஆண்டு கட்டாரில் நடந்த உலகக் கிண்ணத்தை மெஸ்ஸியின் தலைமையிலான ஆர்ஜன்டீன அணி கைப்பற்றியதோடு, 2021–22இல் அவர் கழகம் மற்றும் நாட்டுக்காக 49 போட்டிகளில் 27 கோல்களை பெற்றார்.
மெஸ்ஸி இந்த விருதை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இந்த விருதை ஏற்கனவே அவர் 2016ஆம் ஆண்டும் வென்றிருந்தார்.
“இது மிகச் சிறந்த ஆண்டாக இருந்தது. இந்த விருதை வென்றது பெரும் கௌரவாகும். எனது அணி சகாக்கள் இன்றி இது சாத்தியம் இல்லை. நீண்ட கால கனவை நான் அடைந்தேன். ஒரு சிலருக்கே அதனை அடைய முடியும் என்பதோடு அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் பெற்றவன்” என்று விருதை வென்ற மெஸ்ஸி கூறினார்.
மெஸ்ஸியின் நீண்ட கால கனவாக இருந்த உலகக் கிண்ணத்தை 36 ஆண்டுகளின் பின்னர் ஆர்ஜன்டீன அணிக்கு வென்று கொடுத்த அவர், கட்டார் உலகக் கிண்ணத்தின் தங்கப் பந்து விருதையும் வென்றார். உலகக் கிண்ணத்தில் மொத்தம் ஏழு கோல்களை பெற்ற அவர் தங்கப் பாதணியை வென்ற பிரான்ஸின் ம்பாப்பேவை விடவும் ஒரு கோல் மாத்திரமே குறைவாகப் பெற்றிருந்தார்.
பாரிசில் கடந்த திங்களன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பார்சிலோனாவின் அலெக்சியா புட்டலஸ் ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை கைப்பற்றினார்.
அதேபோன்று, உலகக் கிண்ணம் வென்ற ஆர்ஜன்டீன அணியை வழிநடத்திய லியோனல் ஸ்கலோனி ஆண்டின் சிறந்த ஆடவர் பயிற்சியாளராகத் தேர்வானார். ஆஷ்டன் வில்லா மற்றும் ஆர்ஜன்டீன அணியின் எமலியானோ மார்டினஸ் சிறந்த ஆடவர் கோல் காப்பாளராக விருது வென்றார்.
ஆர்ஜன்டீன அணி உலகக் கிண்ணம் வெல்ல உதவிய 30 வயதான மார்டினஸ், நான்கு பொனால்டி உதைகளை தடுத்ததோடு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸை பொனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தினார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<