ICC இன் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரையில் இரு இந்திய வீரர்கள்

264

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசியின்) ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவோன் கொன்வே ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) மாதம்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கௌரவப்படுத்தி வருகிறது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மாதந்தோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தநிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கொன்வே, இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அரைச் சதம் (70) மற்றும் 3ஆவது போட்டியில் சதமும் அடித்த (116) சுப்மன் கில், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதன்பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் முறையே 40 மற்றும் 112 ஓட்டங்கள் எடுத்தார். இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 360 ஓட்டங்களைக் குவித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த பாபர் அசாமின் சாதனையை சமப்படுத்தினார்.

இதேபோன்று ஜஸ்பிரித் பும்ரா கடந்த சில மாதங்களாக காயத்தால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது இடத்தில் மொஹமட் சிராஜ் விளையாடி வருகின்றார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் குவித்து வரும் சிராஜ் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடம் பிடித்த சிராஜ், நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனிடையே, பாகிஸ்தானில் நடைபெற்ற 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதங்கள் மற்றும் 2 அரைச் சதங்களை அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டெவோன் கொன்வே, அதன்பிறகு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமும், முதலாவது T20I போட்டியில் அரைச் சதமும் அடித்தார்.

இதேவேளை, ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<