ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடந்தால் சிறப்பாக இருக்கும் – அஸ்வின்

496

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடம் தொடர்பில் விவாதங்கள் எழுந்திருக்கும் சந்தர்ப்பத்தில் தொடரை இலங்கையில் நடாத்தினால் சிறப்பாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியினுடைய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் பின்ச்

ஒருநாள் போட்டிகளாக நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரை பாகிஸ்தானில் நடாத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பதன் காரணமாக, ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவேட் மியான்டாட் பொது நிகழ்வு ஒன்றில் விமர்சித்திருந்தார். அந்தவகையில் மியான்டாட்டின் கருத்துக்கள் தொடர்பில் தனது (YouTube Channel) யூடியுப் சேனல் வாயிலாக பேசியிருந்த அஸ்வின் இலங்கையில் ஆசியக் கிண்ணம் நடைபெற்றால் தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

”இவ்வாறான விடயங்களை பல முறை பார்த்துள்ளோம் இல்லையா? நாங்கள் ஆசியக் கிண்ணத்திற்காக உங்களது இடத்திற்கு வர மாட்டோம் எனக் கூறினால், அவர்கள் எங்களது இடத்திற்கு வர மாட்டோம் எனக் கூறுவார்கள்.”

”ஆசியக் கிண்ணம் தொடர்பான இறுதி முடிவு தொடரினை இலங்கையில் நடாத்துவதாக இருக்க முடியும். ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு அது முக்கியமானதாக இருக்கின்றது. பல கிரிக்கெட் தொடர்கள் துபாயில் (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) நடைபெற்றிருக்கின்றன. இந்த தொடர் (ஆசியக் கிண்ணத் தொடர்) இலங்கையில் நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.”

ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா?

விடயங்கள் எவ்வாறாக இருந்த போதிலும் பாகிஸ்தானில் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் விடயம் தொடர்பில் அடுத்த மாதம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<