தன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக இன்னும் விளையாட முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க சகலதுறைவீரரான சொஹைப் மலிக் தெரிவித்திருக்கின்றார்.
>> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முரளி விஜய்!
பெப்ரவரி மாதத்துடன் தன்னுடைய 41ஆவது வயதினை பூர்த்தி செய்யும் சொஹைப் மலிக் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருக்கின்ற போதும் T20i போட்டிகளில் இன்னும் ஓய்வினை அறிவிக்கவில்லை.
அந்தவகையில் கடைசியாக 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணியினைப் பிரதிநிதித்துவம் செய்த சொஹைப் மலிக் T20i போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக தன்னால் இன்னும் சாதிக்க முடியும் என நம்புவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
”அணியில் இருக்கும் வீரர்களில் நான் வயதானவன் என்ற போதும், என்னை 25 வயதுடைய வீரரின் உடற்தகுதிக்கு ஒப்பிட முடியும் என நான் கூறுவதனை நம்புங்கள். நான் இன்னும் மைதானத்திற்குள் வந்து விளையாடுவது மற்றும் எனது வேட்கை என இரண்டு விடயங்களும் என்னை உற்சாகமூட்டுவதாக நம்புகின்றேன். (இதன் காரணமாகவே) நான் தொடர்ந்தும் கிரிக்கெட் ஆடுவதோடு, ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பதில்லை.”
தற்போது சொஹைப் மலிக் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
”நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று எனது கிரிக்கெட் வாழ்க்கையினை பூர்த்தி செய்ய உடனடியாக முடியும் என்ற போதும், நான் அது பற்றி இப்போது யோசனை செய்வது கிடையாது. நான் எனது கிரிக்கெட் விளையாட்டினை விரும்புவதோடு, வாய்ப்பு கிடைக்கும் போது விளையாடுவேன். நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும் T20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவிக்கவில்லை. நான் இப்போதும் தயராக இருப்பதோடு, வாய்ப்பு கிடைக்கும் போது நான் என்னுடைய சிறந்ததை வழங்குவேன்.”
>> அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாரா தசுன் ஷானக?
அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் சொஹைப் மலிக் குறிப்பிட்டிருக்கின்றார்.
”நான் ஒரு கிரிக்கெட் வீரன், நான் போதுமான விடயங்களை எனது வாழ்வில் பார்த்துவிட்டேன். இவ்வாறான விடயங்கள் (நிர்வாக மாற்றங்கள்) எனக்கு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் அணிக்காக விளையாடும் போது உங்களின் பக்கம் யார் இருப்பார்? அல்லது யார் இருக்க மாட்டார் என்பது குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை.”
அத்துடன் T20 போட்டிகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதனையும் சுட்டிக்காட்டிய சொஹைப் மலிக் அதற்கு ஏற்றவாறு தயாராகி வருவதாக குறிப்பிட்டதோடு, அதற்கு ஏனையோரும் தயாராக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.
”அப்போது T20 போட்டிகள் ஆரம்பித்த போது, 130/140 ஓட்டங்கள் எடுத்தால் போதுமாக இருந்தது. ஆனால் இப்போது 220/230 ஓட்டங்கள் பெற்றாலும் நல்ல ஆடுகளத்தில் வெற்றி நிச்சயம் கிடையாது. எனவே T20 போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதனை கண்டு கொள்ள முடிகின்றது. ஒரு கிரிக்கெட் வீரராக இந்த மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியது பொறுப்பும், எப்போதும் உயர்நிலையில் இருக்க ஒரு படி முன்னேற வேண்டி இருப்பதும் அவசியமாக இருக்கின்றது. அத்துடன் உங்களது ஆட்டத்தில் தொடர்ந்தும் திறமைகளை வெளிப்படுத்த வேண்டியும் இருக்கின்றது.”
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<