டாக்கா சர்வதேச மரதனில் பங்குபற்றும் சண்முகேஸ்வரன்

317
12 Sri Lankans to take part in Dhaka Marathon 2023

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 வீர, வீராங்கனைகள் நேற்று (18) பங்களாதேஷை சென்றடைந்தனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நாளை (20) நடைபெறவுள்ள இந்த சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் கென்யா, எதியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி மரதன் ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். இதில் இலங்கை வீரர்கள் முழு மரதன் மற்றும் அரை மரதன் என இருவகை போட்டிகளிலும் களமிறங்கவுள்ளனர்

இதனிடையே, அண்மைக்காலமாக தேசிய மட்ட அரை மரதன் மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு நடைபெற்ற பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த மலையக வீராங்கனை வேலு கிரிஷாந்தினிக்கு இம்முறை போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அத்துடன், கடந்த ஆண்டு பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவு மரதன் ஓட்டப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பிடித்த மற்றுமொரு மலையக வீரரான முத்துசாமி சிவராஜனும் இம்முறை இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை.

இதேவேளை, டாக்கா மரதன் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மரதன் அணியின் பயிற்சியாளராகவும், முகாமையாளராகவும் சஜித் ஜெயலால் செயல்படவுள்ளார்.

இலங்கை மரதன் அணி விபரம்:

  • ஆடவர் முழு மரதன் ஓட்டம் – பிரதீப் தம்மிக்க (கடற்படை), தலவாரிகே ரத்னபால (விமானப்படை), எம்.எஸ் குமார (கடற்படை).
  • ஆடவர் அரை மரதன் ஓட்டம் – குமார் சண்முகேஸ்வரன் (இராணுவம்), டி.எஸ் திஸாநாயக்க (இராணுவம்), ஜி.டி சந்தகெலும் (இராணுவம்).
  • மகளிர் முழு மரதன் ஓட்டம் – சுஜானி பெரேரா (கடற்படை), வத்சலா ஹேரத் (இராணுவம்), தில்ஹானி லியனகே (இராணுவம்).
  • மகளிர் அரை மரதன் ஓட்டம் – சாமினி ஹேரத் (இராணுவம்), நிசன்சலா பண்டார (இராணுவம்), நிலுஷி பெர்னாண்டோ (கடற்படை).

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<