இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செவ்வாய்க்கிழமை (10) குவாஹாடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
>> சூர்யகுமாரின் அதிரடியோடு T20I தொடரினை கைப்பற்றிய இந்திய அணி
தொடருக்கான இந்திய ஒருநாள் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, ஜஸ்ப்ரிட் பும்ரா உபாதையிலிருந்து மீண்டுள்ளதால் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
எனினும் அவரை நேரடியாக ஒருநாள் போட்டிகளில் களமிறக்கினால், மீண்டும் உபாதை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்து அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. எனவே குறித்த தொடருக்கு முழுமையாக தயாராகும் முகமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ரா இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற T20i தொடரின்போது இவர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன்காரணமாக நடந்து முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடவில்லை.
இவ்வாறான நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்த தொடரையும் அவர் தவறவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஒருநாள் குழாம்
ரோஹித் சர்மா (தலைவர்), ஹர்திக் பாண்டியா, விராட் கோஹ்லி, கே.எல். ராஹுல், சிரேயாஸ் ஐயர், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன், வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் பட்டேல், உம்ரான் மலிக், அர்ஷ்டீப் சிங், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<