மூன்று புதுமுக வீரர்களுடன் ஒருநாள் தொடரில் களமிறங்கும் பாகிஸ்தான்

New Zealand tour of Pakistan 2022-23

317

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஹீட் அப்ரிடி, நியூசிலாந்து தொடருக்கான குழாத்தை பெயரிட்டுள்ளார்.

>> ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு விபரம் வெளியானது!

அதன்படி இரண்டு புதுமுக துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் ஒரு புதுமுக சகலதுறை வீரர் என மூன்று புதுமுக வீரர்கள் பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி துடுப்பாட்ட வீரர்களான கம்ரான் குலாம், டையாப் தாஹீர் ஆகியோருடன், சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் உசமா மிர் அணியில் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இறுதியாக நடைபெற்றுமுடிந்த பாகிஸ்தான் கிண்ண லிஸ்ட் ஏ போட்டித்தொடரில் மேற்குறித்த மூவரும் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில், டையாப் தாஹீர் இறுதிப்போட்டியில் அரைச்சதம் கடந்து ஆட்டநாயகனகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

புதுமுக வீரர்கள் அணிக்குள் வருகைத்தந்துள்ளதுடன், அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சதாப் கான் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சதாப் கான் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக்கில் வைத்து விரல் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.

சதாப் கான் உபாதைக்குள்ளாகியுள்ள போதும் அணித்தலைவர் பாபர் அஷாமுடன், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், பக்ஹார் ஷமான், நஷீம் ஷா போன்ற அணியின் முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

>> முதல் T20I இல் இலங்கை அணி சறுக்கியது எங்கே? | SL vs IND 1st T20I Cricketry

பாகிஸ்தான் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கராச்சியில் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் ஒருநாள் குழாம்

பாபர் அஷாம் (தலைவர்), பக்ஹார் ஷமான், ஹரிஸ் ரவூப், ஹரிஸ் சொஹைல், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசீம் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் அலி ஆகா, சஹானவாஸ் தஹானி, ஷான் மசூட், டயாப் தாஹீர், உசமா மிர்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<