இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த சில வருடங்களுக்கு பின்னர் கிடைத்த மிக உத்வேகமான, முன்னேற்றகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான வருடங்களில் ஒன்றாக 2022ம் ஆண்டு இருந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 44 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 20 வெற்றிகளையும், 21 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அணியின் வெற்றிச்சதவீதம் 30 இற்கும் குறைவான இடத்திலிருந்து 47.61 ஆக அதிகரித்திருக்கிறது.
>> LPL 2022 தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள்
அதுமாத்திரமின்றி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 53.33 வெற்றி சதவீதத்தை கொண்டுள்ள இலங்கை அணிக்கு இறுதிப்போட்டிக்கான வாய்ப்பும் விரல் நுணியில் காத்திருக்கிறது. அடுத்துவரும் நியூசிலாந்து தொடர் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாத்திரமின்றி இந்த ஆண்டு விளையாடிய 3 ஒருநாள் தொடர்களில் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் தொடரை சமப்படுத்தியிருந்தது. எனவே ஒருநாள் தொடர் தோல்வியை சந்திக்காமல் 2023ம் ஆண்டுக்கு இலங்கை அணி காலடி எடுத்துவைக்கிறது.
T20I போட்டிகளை எடுத்துக்கொண்டால் 25 போட்டிகளில் 11 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளது. எனினும் மிக முக்கியமாக 8 வருடங்களுக்கு பின்னர் ஆசியக்கிண்ணத்தை கைப்பற்றி மிகச்சிறந்த வருடமாக இந்த ஆண்டை மாற்றியிருக்கிறது இலங்கை.
இந்த ஆண்டை பொருத்தவரை கடந்த 6 ஆண்டுகளை விட மிகப்பெரிய முன்னேற்றத்துடன் பயணித்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த பயணத்தில் இருந்த சில முக்கியமான விடயங்களை இங்கு பார்க்கலாம்.
மிக்கி ஆர்தருக்கு பதிலாக ருமேஷ் ரத்நாயக்க
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆர்தர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக இடைக்கால பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.
ஓய்வை அறிவித்த பானுக ராஜபக்ஷ
இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். எனினும், தன்னுடைய ஓய்வு அறிவிப்பை மீளப்பெறுவதாக ஒரு சில தினங்களில் மீண்டும் அறிவித்தார்.
ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இலங்கை
இந்த ஆண்டு இலங்கை அணி முதல் தொடராக ஜிம்பாப்வே அணியை தங்களுடைய சொந்த மண்ணில் ஐசிசி சுப்பர் லீக்கிற்கான ஒருநாள் தொடரில் எதிர்கொண்டது.
பல்லேகலையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என வெற்றிக்கொண்டது.
மெண்டிஸ், குணதிலக்க மற்றும் டிக்வெல்லவின் தடை நீக்கம்
இங்கிலாந்தில் வைத்து தனிமைப்படுத்தல் விதியை மீறிய குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்டிருந்த குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரின் தடை நீக்கப்பட்டது.
>> இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
U19 உலகக்கிண்ணத்தில் இலங்கைக்கு ஆறாவது இடம்
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சித்தோல்வியை கொடுத்த துனித் வெல்லாலகே தலைமையிலான இலங்கை அணி, ஆறாவது இடத்தை பெற்றுக்கொண்டது.
டில்ருவான் பெரேரா ஓய்வு
இலங்கை அணியின் முன்னணி டெஸ்ட் வீரர்களில் ஒருவராக இருந்த டில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இவர் இலங்கை அணிக்காக 43 டெஸ்ட், 13 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 4-1 என T20I தொடர் தோல்வி
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 4-1 என T20I தொடரை இழந்தது. இதில் இரண்டாவது போட்டியில் சுபர் ஓவரில் தோல்வியடைந்த இலங்கை அணி 5வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, வைட்வொஷ் தோல்வியை தவிர்ததுக்கொண்டது.
இந்தியாவுடன் 5-0 என தோல்வி
அவுஸ்திரேலிய தொடரையடுத்து இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில், 3-0 என வைட்வொஷ் தோல்வியை சந்தித்தது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததுடன், இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்தது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து லக்மால் ஓய்வு
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவித்தார். இவர் இலங்கை அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் 171 விக்கெட்டுகளை சாய்த்துள்ளதுடன், 86 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இலங்கை அணியுடன் இணைந்த கிரிஸ் சில்வர்வூட்
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பங்களாதேஷில் டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த நாட்டில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என வெற்றிக்கொண்டது. தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் இரட்டைச்சதத்தை தவறவிட்டபோதும் (199), இரண்டு சதங்களுடன் 344 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பாகிஸ்தானில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் இலங்கை மகளிர் அணி தோல்வியை சந்தித்திருந்தது. ஒருநாள் தொடரை 2-1 என தோல்வியடைந்திருந்ததுடன், T20I தொடரை 3-0 என இழந்திருந்தது.
>> சாதனைகளை குவித்த இஷான் கிஷனின் கன்னி இரட்டைச்சதம்!
இலங்கைக்கு எழுச்சிக்கொடுத்த அவுஸ்திரேலிய தொடர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடுவதற்கான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
குறித்த இந்த தொடரில் கடைசி T20I போட்டியில் தசுன் ஷானகவின் அதிரடியுடன் முதல் வெற்றியை பெற்றிருந்த இலங்கை அணி தொடரை 2-1 என இழந்திருந்தது.
எனினும் ஒருநாள் தொடரில் துனித் வெல்லாலகே போன்ற புதுமுக வீரர்களின் வருகையுடன் 3-2 என வெற்றிபெற்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்தது.
இரட்டைச்சதமடித்த சந்திமால், பிரபாத்தின் சாதனை
இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இரட்டைச்சதத்தை (206) பதிவுசெய்தார்.
அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருந்த பிரபாத் ஜயசூரிய அறிமுக போட்டியில் இலங்கை அணிக்காக அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர் (12 விக்கெட்டுகள்) என்ற சாதனைக்கு சொந்தக்காரரானர்.
சொந்த மண்ணில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை மகளிர் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை 3-0 என வெற்றிக்கொண்டதுடன், T20I தொடரை 2-1 என வெற்றிக்கொண்டது. இதில் இறுதி T20I போட்டியில் இலங்கை அணியின் தலைவி சமரி அதபத்து 48 பந்துகளில் 80 ஓட்டங்களை அதிரடியாக குவித்து அணிக்கு ஒரு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.
>> சர்வதேச கிரிக்கெட்டை மிரட்டிய இலங்கை பந்துவீச்சாளர்கள்!
பாகிஸ்தான் தொடரை சமப்படுத்திய இலங்கை
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இலங்கை அணி துரதிஷ்டவசமாக இழந்திருந்தது. எனினும் இரண்டாவது போட்டியில் அற்புதமாக ஆடி 246 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் பிரபாத் ஜயசூரிய 17 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். குறிப்பிட்ட இந்த டெஸ்ட் தொடருடன் இந்த ஆண்டுக்கான இலங்கை அணிக்கான டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றன.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட ஆசிய கிண்ணம்
இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசியக்கிண்ணத் தொடர், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டது. எனினும், தொடரை நடத்தும் உரிமத்தை இலங்கை கிரிக்கெட் சபை தக்கவைத்திருந்தது.
ஆசியக்கிண்ணத்தை வசமாக்கிய இலங்கை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக்கிண்ணத்தின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை இலங்கை சந்தித்திருந்தது.
எனினும் அடுத்து நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி இலங்கை அணி 6வது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
சுபர் 12 சுற்றுடன் வெளியேறிய இலங்கை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றின் முதல் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக தோல்வியடைந்த இலங்கை அணி, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களை வீழ்த்தி சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது.
சுபர் 12 சுற்றில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை மாத்திரம் வீழ்த்திய இலங்கை அணி நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து வெளியேறியது. எனினும் குழுநிலையில் 4 இடங்களுக்குள் இடத்தை பிடித்ததால், அடுத்த T20 உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெற்றுக்கொண்டது.
>> சர்வதேச கிரிக்கெட்டை மிரட்டிய இலங்கை பந்துவீச்சாளர்கள்!
அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க
சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணத்திலக்க அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
எனினும் சுமார் மூன்று வாரங்களுக்கு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், அவுஸ்திரேலியாவிலிருந்து பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரை சமப்படுத்திய இலங்கை
ஐசிசி சுபர் லீக்கிற்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 1-1 என சமப்படுத்தியிருந்தது.
பல்லேகலையில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி வென்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்டது. எனினும் மூன்றாவது போட்டியில் சரித் அசலங்கவின் அபாரமான இன்னிங்ஸ் காரணமாக இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
அதேநேரம் ஐசிசி உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 போட்டிகளை இலங்கை அணி வெற்றிக்கொளள்வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
T10 தொடரை நடத்தவுள்ள இலங்கை கிரிக்கெட்
அடுத்த ஆண்டிலிருந்து இலங்கையில் புதிய T10 தொடர் ஒன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் LPL தொடருக்கு முன்னர் இந்த தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>> சர்வதேசத்தில் இந்த ஆண்டு பிரகாசித்த இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்!
ஹெட்ரிக் சம்பியனாகிய ஜப்னா கிங்ஸ்
இலங்கையில் மூன்றாவது தடவையாக நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி, கொழும்பு ஸ்டார்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
தொடரின் ஆட்டநாயகனாக சதீர சமரவிக்ரம, அதிக ஓட்டங்கள் அவிஷ்க பெர்னாண்டோ, அதிக விக்கெட்டுகள் கார்லோஸ் பிராத்வைட் மற்றும் சிறந்த வளர்ந்துவரும் வீரர் என விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<