கிரிக்கெட் உலகினை அதிசயிக்க வைத்த கத்துக்குட்டி அணிகள்

391
Cricket big upsets in the recent times

2022ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியினை வீழ்த்திய நமீபிய கிரிக்கெட் அணி கத்துக்குட்டி (Underdogs) அணிகளும் சர்வதேச அரங்கில் அதிக போட்டித் தன்மையினை வெளிப்படுத்தும் கிரிக்கெட் அணிகளாக மாறி வருகின்றமைக்கு ஒரு ஒரு சான்றாக அமைந்திருந்தது.

>> இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

பொதுவாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) இன் முழு அங்கத்துவத்தினைப் பெறாத நாடுகள் பொதுவாக கத்துக் குட்டி கிரிக்கெட் அணிகளாக கருதப்படுகின்றன.

இந்த நாடுகள் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெற்ற கிரிக்கெட் அணிகளுடன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது அரிது என்ற போதிலும் பல்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் அந்த நாடுகள் முழு அங்கத்துவ நாடுகளுடன் விளையாடுவதற்கான சாத்தியப்பாடுகள் உருவாகுகின்றது.

ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ நாடுகள் கத்துக் குட்டி கிரிக்கெட் அணிகளை எதிர்கொள்ளும் போது முழு அங்கத்துவ நாடுகளுக்கே வெற்றி கிடைக்கும் என கருதப்படுகின்ற போதும், வழமைக்கு மாற்றமாக கத்துக் குட்டி அணிகள் முழு அங்கத்துவ நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்த சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

இவ்வாறு கத்துக்குட்டி கிரிக்கெட் அணிகள் அண்மைய நாட்களில் முழு அங்கத்துவ கிரிக்கெட் அணிகளுக்கு அதிர்ச்சியூட்டிய நான்கு முக்கிய கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்போம்.

நமீபியா எதிர் இலங்கை – 2022 T20 உலகக் கிண்ணம்

ஒருநாள் போட்டிகளுக்கான தகுதியைக் கொண்டுள்ள போதும் நமீபியா இன்னும் கத்துக் குட்டி கிரிக்கெட் அணிகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது. நமீபிய அணி 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை அணியினை எதிர் கொண்டிருந்ததோடு குறித்த அப்போட்டியில் முதலில் துடுப்பாடி 168 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நமீபிய அணிக்காக ஜேன் பிரைலிங் நிதானம் கலந்த அதிரடியுடன் 28 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.SLvNAM

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி வெற்றி இலக்கிற்கான தமது பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து தடுமாறியதோடு இறுதியில் 108 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து நமீபிய அணியுடன் அதிர்ச்சி தோல்வியினைச் சந்தித்தது.

இந்த தோல்வி கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையினை நமீபியா முதல் தடவையாக வீழ்த்திய நிகழ்வாக பதிவாகியிருந்ததோடு, ஜிம்பாப்வேயிற்கு அடுத்ததாக நமீபியா T20I போட்டிகளில் வீழ்த்திய டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடாகவும் இலங்கை அணி இந்த தோல்வி மூலம் மோசமான சாதனை ஒன்றினைப் பதிவு செய்திருந்தது.

நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா – 2022 T20 உலகக் கிண்ணம்

இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிக் குழுநிலைப் போட்டிகளில் ஒன்றில் நெதர்லாந்து – தென்னாபிரிக்க அணிகள் மோதிய போட்டியும் நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து கொலின் எக்கர்மனின் துடுப்பாட்டத்தோடு 159 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த வெற்றி இலக்கு டேவிட் மில்லர், ரிலீ ரூசோ போன்ற வீரர்கள் கொண்ட பலமான துடுப்பாட்ட வரிசை உடைய தென்னாபிரிக்க அணிக்கு இலகுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பந்துவீச்சாளர்கள் மூலம் நெருக்கடி கொடுத்த நெதர்லாந்து அணியினைத் தாண்டி தென்னாபிரிக்க அணிக்கு 145 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.SAvNED

இதனால் தென்னாபிரிக்க அணி நெதர்லாந்துடன் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியொன்றில் அதிர்ச்சி தோல்வியினைத் தழுவியதுடன் இந்த தோல்வி, T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து தென்னாபிரிக்கா வெளியேறுவதற்கும் பிரதான காரணமாக மாறியிருந்தது.

ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து – 2018 ஒருநாள் தொடர்

நடப்பு உலகில் உள்ள கிரிக்கெட் அணிகளில் மிகவும் வலிமையான அணியாக இங்கிலாந்து காணப்படுகின்றது. இங்கிலாந்து அணி எவ்விதமான சூழ்நிலைகளிலும் வெற்றிக்கு முயற்சிக்கும் அணிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

>> கோடிகளை அள்ளிய செம் கரன் ; விலைபோகாத இலங்கை வீரர்கள்!

இந்த நிலையில் இங்கிலாந்து அணியினை ஒருநாள் போட்டிகளில் 2018ஆம் ஆண்டில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தது ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி. எடின்பேர்க் அரங்கில் நடைபெற்ற ஒரு போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்த நிகழ்வு அரங்கேறியது. அந்த ஒருநாள் தொடரின் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடி இருந்ததோடு அபாரமான முறையில் 371 ஓட்டங்களை பெற்றது. ஸ்கொட்லாந்து அணிக்காக கெலும் மெக்லியோட் அபார சதம் விளாசி ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அதனை தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து வெற்றி இலக்கை நெருங்கிய போதும் அவ்வணியினால் 48.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 365 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக ஸ்கொட்லாந்து ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியினைப் பதிவு செய்ததோடு மயிரிழையில் போட்டியினைப் பறிகொடுத்த இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை அடுத்து ஒருநாள் போட்டிகளில் ஸ்கொட்லாந்துடன் தோல்வி அடைந்த ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் கொண்ட நாடாகவும் மாறியது.

ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள், 2022 T20 உலகக் கிண்ணம்

இங்கிலாந்தினை அடுத்து இரண்டு தடவைகள் T20 உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி காணப்படுகின்றது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் T20 உலகக் கிண்ணக் கனவினை முதல் சுற்றிலேயே கலைத்தது ஸ்கொட்லாந்து அணியுடனான மேற்கிந்திய தீவுகளின் தோல்வி.

>> WATCH – LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான அனுபவத்தை கூறும் டினோசன்!

மேற்கிந்திய – ஸ்கொட்லாந்து அணிகளின் இந்தப் போட்டி 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுப் போட்டிகளில் ஒன்றாக இருந்ததோடு, இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 160 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. ஸ்கொட்லாந்து அணிக்காக அரைச்சதம் விளாசிய ஜோர்ஜ் முன்சி 66 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் துரதிஷ்டவசமான முறையில் 118 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மோசமான தோல்வியினைச் சந்தித்தது. அத்துடன் இது கிரிக்கெட் போட்டிகளில் முதன் முறையாக மேற்கிந்திய தீவுகள் ஸ்கொட்லாந்து அணியுடன் அடைந்த தோல்வியாகவும் மாறியது.

இன்னும் மேற்கிந்திய – ஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான மோதலை அடுத்து, T20 உலகக் கிண்ண முதல் சுற்றில் ஒரு வெற்றியினை மாத்திரம் பதிவு செய்த மேற்கிந்திய தீவுகள் அதிர்ச்சிகரமாக குறித்த T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றோடு, உலகக் கிண்ணத்தில் இருந்தும் வெளியேறி இருந்தது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<