மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராகும் ரஷீட் கான்!

Afghanistan Cricket

305

ஆப்கானிஸ்தான் T20I அணியின் புதிய தலைவராக சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

T20I அணியின் தலைவராக செயற்பட்டுவந்த மொஹமட் நபி T20 உலகக்கிண்ணத்துடன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக ரஷீட் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

>> கோர விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிசாப் பாண்ட்

ரஷீட் கான் இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் T20I அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் நவம்பர் மாதம் வரை 7 T20I போட்டிகளில் தலைவராக செயற்பட்டதுடன், 4 போட்டிகளில் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அதுமாத்திரமின்றி இவரின் தலைமையில் ஒருநாள் மற்றும் T20I என 16 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியிருந்ததுடன், 7 போட்டிகளில் வெற்றியினை பதிவுசெய்திருந்தது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த 2021ம் ஆண்டிலிருந்து ரஷீட் கானுக்கு தலைமைத்துவ பதவியை கொடுக்க முற்பட்டபோதும், தன்னுடைய பிரகாசிப்பை கருத்திற்கொண்டு பதவியை ஏற்க மறுத்திருந்தார். எனினும் அதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டபோதும், குழாம் அறிவிக்கப்பட்ட பின்னர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இவ்வாறான நிலையில் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இவர், பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20I தொடரின்போது அணியின் தலைவராக செயற்படுவார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<