மொரோக்கோ அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குரோஷிய அணி உலகக் கிண்ண கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை உறுதி செய்தது.
உலகக் கிண்ணத்தின் அரையிறுதியில் தோற்ற மொரோக்கோ மற்றும் குரோஷிய அணிகள், தொடரில் மூன்றாவது இடத்தை உறுதி செய்வதற்காக பலப்பரீட்சை நடத்தின.
கலீபா சர்வதேச அரங்கில் சனிக்கிழமை (17) நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்திலேயே இரு அணிகளும் பதிலுக்கு பதில் கோல் புகுத்த பரபரப்பு அதிகரித்தது.
>> இன்னும் ஒரு முறை சண்டை செய்வோம் – மெஸ்ஸி
தொடர் முழுவதும் பதில் வீரராக இருந்து வந்த பின்கள வீரர் ஜாஸ்கோ கவார்டியோல் ஏழாவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் புகுத்தினார். பரிசிச் வழங்கிய பந்தை அவர் தாவி வலையில் போட்டார். 20 வயதான கவார்டியோல் குரோஷிய அணிக்காக கோல் புகுத்திய இளம் வீரர் எனவும் சாதனை படைத்தார்.
எனினும் அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே அச்ரப் டாரி மொரோக்கோவுக்காக பதில் கோல் திருப்பினார். கிடைத்த பிரீ கிக்கை பயன்படுத்தி பந்தை தாழ்வாக தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை அடைந்து கொள்வதற்கு இரு அணிகளும் தொடர்ந்து போராடின. இந்நிலையில் முதல் பாதி முடிவதற்கு மூன்று நிமிடங்கள் இருக்கும்போது மிஸ்லேவ் ஓர்சிக் மொரோக்கோ கோல் கம்பத்தில் பக்கவாட்டியாக இருந்து வளைவாக உதைத்த பந்து உயரச் சென்று கோலாக மாறியது.
இதன் மூலம் 2-1 என முன்னிலை பெற்ற குரோஷிய அணி கடைசி வரை அதனை தக்கவைத்துக்கொண்டு வெற்றியை உறுதி செய்தது. போட்டியில் குரோஷியா ஆதிக்கம் செலுத்தியபோதும் மொரொக்கோ அணியால் கோல் முயற்சிகளை பெற, எதிராணி தற்காப்பு அரணுக்கு பல முறை சவால் விடுக்க முடிந்தது.
>> தனது எதிர்கால திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட லியனோல் மெஸ்ஸி
ரஷ்யாவில் கடந்த முறை நடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்த குரோஷியா தனது கால்பந்து ஆதிக்கத்தை உறுதி செய்யும் வகையில் கட்டாரில் இம்முறை மூன்றாவது இடத்தை பெற்றது.
குரோஷியா 1998 ஆம் ஆண்டு முதல் முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கியபோதும் அந்தத் தொடரில் மூன்றாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் முதல் ஆபிரிக்க மற்றும் அரபு நாடாக உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய மொரோக்கோ நான்காவது இடத்துடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்துள்ளது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<