லியோனல் மெஸ்ஸியின் சாகச ஆடத்தின் மூலம் குரோசிய அணியை 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்ஜன்டீன அணி 2022 கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.
லுசைலா அரங்கில் இலங்கை நேரப்படி புதன்கிழமை (14) அதிகாலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் புகுத்தியதன் மூலம் ஆர்ஜன்டீனா முன்னிலை பெற்றது.
பந்தை எதிரணி கோல் கம்பத்திற்குள் கடத்திச் சென்ற ஜூலியன் அல்வேரஸை குரோசிய கோல் காப்பாளர் டொமினின் லிவகோவிச் வீழ்த்தியதை அடுத்தே ஆர்ஜன்டீனாவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.
இந்த கோலின் மூலம் உலகக் கிண்ண போட்டிகளில் 11 கோல்களை பெற்ற மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணிக்காக உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்ற கப்ரியேல் படிஸ்டுடாவின் சாதனையை முறியடித்தார். படிஸ்டுடா 1994, 1998 மற்றும் 2002 உலகக் கிண்ணங்களில் மொத்தம் 10 கோல்களை பெற்றிருந்தார்.
அதேபோன்று இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை ஐந்து கோல்களை பெற்றிருக்கும் மெஸ்ஸி, பிரான்ஸின் கைலியன் ம்பப்பேவுடன் தங்கப் பாதணியை வெல்லும் போட்டியில் உள்ளார்.
தவிர, 35 வயதான மெஸ்ஸி இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அதிக உலகக் கிண்ணப் போட்டியில் ஆடிய வீரராக முன்னாள் ஜெர்மனி வீரர் லூதர் மத்தவுஸின் சாதனையை சமப்படுத்தியுள்ளார். இருவரும் தலா 25 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடியுள்ளனர்.
முதல் கோலை பெற்றதன் பின்னர் மைதானத்தில் ஆர்ஜன்டீனாவின் ஆட்டம் வேகம் பெற்றது. ஐந்து நிமிடயங்கள் கழித்து அல்வேரஸ் குரோசிய கோல் பகுதிக்குள் 50 மீற்றர்கள் தூரம் பந்தை தனியே கடத்திச் சென்று ஆர்ஜன்டீனாவுக்காக இரண்டாவது கோலை பெற்றார்.
பின்னர் 69 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது சாகசத்தை ஆட்டத்தை வெளிக்காட்டினார். எதிரணி விரர்களின் தடுப்பு முயற்சிகளை முறியடித்து பந்தை நேரத்தியாக கடத்திச் சென்ற மெஸ்ஸி கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து அல்வேரஸுக்கு பரிமாற்றினார். அல்வேரஸ் அதனை இலகுவாக வலைக்குள் உதைத்தார்.
2018 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோசிய அணி பந்தை கட்டுப்படுத்துவதற்கு போராடியதோடு இந்தப் போட்டியில் ஒரு உதையை மாத்திரமே இலக்கை நோக்கி செலுத்தியது.
குறிப்பாக தனது கடைசி உலகக் கிண்ணத்தில் ஆடும் 37 வயதான அணித் தலைவர் லூகா மொட்ரிச் மற்றும் அனுபவ வீரர்கள் ஏமாற்றம் தரும் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குரோசியா உலகக் கிண்ணத்தில் 3ஆம் இடத்தை பிடிப்பதற்காக வரும் சனிக்கிழமை களமிறங்கவுள்ளது.
மறுபுறம் ஆர்ஜன்டீன அணி 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மூன்றாவது உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
அர்ஜன்டீனா கடைசியாக 2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது அந்த அணி ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<