பாடசாலை கால்பந்தில் சம்பியன் பட்டம் குவித்த வடக்கு அணிகள்!

769

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித்தொடரின் சம்பியன்களாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூி, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹிசைனி சம்பியன்களாக முடிசூடியிருந்தன.

ஆண்களுக்கான 16 வயதின் கீழ் அணிகளுக்கான சம்பியனாக ஹமீட் அல் ஹிசைனி, 20 வயதின் கீழ் போட்டித்தொடரில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் 18 வயது பிரிவில் இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணிகள் சம்பியனாகியிருந்தன.

சர்ச்சையின் விளைவு; மன்செஸ்டர் யுனைடட்டில் இருந்து வெளியேறும் ரொனால்டோ

ஆண்களுக்கான 16 வயது பிரிவு

ஆண்களுக்கான 16 வயதின் கீழ் இறுதிப்போட்டியில் கொழும்பு ஷாஹிரா கல்லூரி மற்றும் ஹமீட் அல் ஹிசைனி கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப்போட்டி முழுவதும் இரண்டு அணிகளும் எந்தவித கோல்களும் பெறாத நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி உதையில் ஹமீட் அல் ஹிசைனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியானாகியது. இந்த வயதுப்பிரிவின் மூன்றாவது இடத்தை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணி பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 18 வயது பிரிவு

கொழும்பு ஹமீட் அல் ஹிசைனி கல்லூரி அணியை வீழ்த்தி இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி 18 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான சம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதிப்போட்டியில் ஹமீட் அல் ஹிசைனி அணியை எதிர்த்தாடி 2-0 என்ற கோல்கள் கணக்கில் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.

ஆண்களுக்கான 20 வயது பிரிவு

அகில இலங்கை 20 வயதின் கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து இறுதிப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி சம்பினாக முடிசூடியது.

இறுதிப்போட்டியில் மன்னார் சென். சேவியர் அணியை எதிர்கொண்டு புனித பத்திரசியார் கல்லூரி விளையாடியது.  போட்டியில் இரண்டு அணிகளும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டநேர இறுதியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்று போட்டி சமனிலையாகியது.

பின்னர் வெற்றியை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட பெனால்டி உதையில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனாக முடிசூடியது.

இதேவேளை பெண்களுக்கான 20 வயதின் கீழ் போட்டித்தொடரில் குருணாகல் பெண்கள் மலியதேவ மகா வித்தியாலய அணியை எதிர்கொண்டு 3-0 என்ற கோல்கள் கணக்கில் மகாஜனா கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.

அதேநேரம் பெண்களுக்கான 17 வயதின் கீழ் இறுதிப்போட்டியில் பொலன்னறுவை பன்வெவ மகா வித்தியாலய அணியை 2-0 என வீழ்த்தி மகாஜனா கல்லூரி அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<