பெதும் நிஸ்ஸங்கவின் திறமையை புகழும் நவீட் நவாஸ்!

Afghanistan tour of Sri Lanka 2022

871

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க அற்புதமான திறமைக்கொண்ட வீரர் என இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற நிலையில், இலங்கை அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஒருநாள் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி

இந்தப்போட்டியில் இலங்கை அணிசார்பாக பெதும் நிஸ்ஸங்க 85 ஓட்டங்களையும், வனிந்து ஹஸரங்க 66 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திய பெதும் நிஸ்ஸங்க தொடர்பில் கருத்து வெளியிட்ட நவீட் நவாஸ், “பெதும் நிஸ்ஸங்க அற்புதமான வீரர். அனைத்துவகை போட்டிகளிலும் அவர் பிரகாசித்து வருகின்றார். சரியான நுணுக்கங்களையும், வளர்ச்சியையும், உடற்தகுதியையும் உடைய வீரர். எனவே, ஏனைய வீரர்களுடன் இணைந்து சிறந்த சேவையை அணிக்கு வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

அதேபோன்று இப்போதுள்ள குழாத்தில் இன்னும் மூன்று, நான்கு வீரர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கான கேள்விகளை தீர்த்துவைத்தால், எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டை வளர்ச்சியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

அதேநேரம் அவுஸ்திரேலிய தொடரில் பிரகாசித்த இளம் வீரர் துனித் வெல்லாலகேவுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தொடர்பிலும் இவர் குறிப்பிட்டார்.

“அணியின் கட்டமைப்பு காரணமாக துனித் வெல்லாலகே இணைக்கப்படவில்லை. அவுஸ்திரேலிய தொடரில் விளையாடிய அணி கட்டமைப்புடன் நாம் களமிறங்கவில்லை. ஆப்கானிஸ்தானுடன் அணிக்கட்டமைப்பை மாற்றியிருந்தோம். அதனால்தான் துனித் விளையாடவில்லை” என குறிப்பிட்டார்.

இதேவேளை இந்தப்போட்டியில் வீரர்களின் பிரகாசிப்புகள் தொடர்பில் அவதானித்து, அடுத்த போட்டிகளில் மாற்றங்களை மேற்கொள்ளவதா? என்பது தொடர்பில் தேர்வுக்குழுவிடம் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி, கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<