T20 உலகக்கிண்ணத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் ஹஸரங்க!

ICC T20 World Cup 2022

512

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் T20 உலகக்கிண்ணத்தின் சிறந்த வீரரை தெரிவுசெய்யும் முகமாக 9 வீரர்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

T20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளதுடன், இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (13) மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

>> இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் லக்ஷ்மன்!

இவ்வாறான நிலையில் இந்த T20 உலகக்கிண்ணத்தில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியுள்ள 9 வீரர்களை பரிந்துரைசெய்துள்ள ஐசிசி, வாக்கெடுப்பின் மூலம் சிறந்த வீரரை தெரிவுசெய்யவுள்ளது.

அந்தவகையில் தற்போதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள (15 விக்கெட்டுகள்) இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவையும் பெயரிட்டுள்ளது. இலங்கை அணி சார்பாக வனிந்து ஹஸரங்க மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை பொருத்தவரை நான்கு அரைச்சதங்களை பதிவுசெய்து இம்முறை அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் விராட் கோஹ்லி (296 ஓட்டங்கள்) மற்றும் ஆறு போட்டிகளில் 239 ஓட்டங்களை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியிலிருந்து இரண்டு வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான சதாப் கான் பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமான அரைச்சதம் ஒன்றையும் பதிவுசெய்திருந்தார்.

இவருடன் வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடியும் இந்த பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ஆரம்ப பந்து ஓவர்களில் எதிரணிகளின் முக்கியமான விக்கெட்டுகளையும் இவர் சாய்த்துள்ளார்.

>> T20 உலகக்கிண்ணத் தோல்வியின் பின்னர் இலங்கை அணியில் மாற்றம்?

இவர்களுடன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த செம் கரன், அணித்தலைவர் ஜொஸ் பட்லர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

செம் கரன் இறுதி ஓவர்களில் அற்புதமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் (10 விக்கெட்டுகள்) என்பதுடன், ஜொஸ் பட்லர் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் அரைச்சதம் விளாசி அணியை (199 ஓட்டங்கள்) வெற்றிக்கு அழைத்துச்சென்றிருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதியில் அபார அரைச்சதத்தை பதிவுசெய்திருந்ததுடன், 2 அரைச்சதங்களுடன் தொடரில் 211 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

மேற்குறித்த முன்னணி வீரர்கள் வரிசையில் ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சிக்கண்டர் ரஷாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெறுவதற்கு பந்துவீச்சில் பிரகாசித்திருந்த இவர், ஒரு அரைச்சதம் அடங்கலாக 219 ஓட்டங்களை 8 போட்டிகளில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<