அதிர்ச்சி தோல்வியுடன் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை ஆரம்பித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தமக்கு எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம், நாளை (17) ஐக்கிய அரபு இராச்சியத்தினை கீலோங் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.
கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்
இலங்கை
ஆசியக் கிண்ண சம்பியன்களுக்கு நமீபிய அணி T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் அதிர்ச்சி வைத்தியம் செய்யும் என எவரும் உண்மையில் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் நமீபிய அணியுடனான தோல்வி தொடரின் ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டிய விடயங்களை இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டியிருக்கின்றது. போட்டியின் முதல் 15 ஓவர்களிலும் திறமையாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸின் பிந்திய ஓவர்களில் (Death Overs) வெளிப்படுத்திய மோசமான ஆட்டமே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
>> T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி
இனி போட்டியின் Death Overs இணை சரியான முகாமை செய்ய வேண்டியதன் அவசியத்தினை அணித்தலைவர் தசுன் ஷானக்க உணர்ந்திருப்பார். ஆசியக் கிண்ணத் தொடரிலும் இந்தப் பிரச்சினை இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருந்த போதிலும் இறுதிப் போட்டியில் சரியான முகாமை தொடரின் வெற்றியாளர்களாக இலங்கை கிரிக்கெட் அணியினை மாற்றியிருந்தது.
அத்துடன் துடுப்பாட்ட வரிசை தொடர்பிலும் கேள்வி எழுகின்றது. அந்த கேள்வி கடந்த நான்கு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தனுஷ்க குணத்திலக்கவிற்கு நமீபிய மோதலில் ஏன் வாய்ப்பளிக்கப்பட்டது என்பதாகும். வேகப்பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ளும் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக குணத்திலக்க இருந்த போதும் அவர் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் நிலையில் இல்லை (Form Out) என்பது தெளிவாகின்றது. எனவே அவரின் இடத்தினை சரித் அசலன்கவினை வைத்து பரிசோதித்து பார்க்க முடியும். சரித் அசலன்க ஆசியக் கிண்ணத் தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போயினும் கடந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக காணப்படுகின்றார்.
அத்துடன் இலங்கை அணி பௌண்டரிகள் உடன் அதிரடியாக ஓட்டங்கள் பெறும் நோக்கத்திலேயே ஆடாமல் முடிந்தளவு Strike Rotation மூலம் இணைப்பாட்டங்களை உருவாக்குவதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். இந்த விடயங்கள் சரி செய்யப்படும் போது இலங்கை அணியின் துடுப்பாட்டம் வலுப்பெறும் என்பதில் சந்தேகம் கிடையாது.
ஆனால் பாராட்டப்பட வேண்டிய விடயம் இலங்கை அணியின் களத்தடுப்பாகும். நமீபிய மோதலில் இலங்கை அணியினர் அசாத்தியமான களத்தடுப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதன்படி இலங்கை அணிக்கு அடுத்த மோதல் தீர்க்கமான போட்டி என்பதால் கட்டாய வெற்றி ஒன்றினை பெற 100% பங்களிப்பை அனைத்து துறைகளிலும் இலங்கை வீரர்கள் வழங்க வேண்டும்.
>> எமது பந்துவீச்சாளர்கள் திட்டங்களை சரியாக செயற்படுத்தவில்லை – தசுன்
ஐக்கிய அரபு இராச்சியம்
யாரும் நமீபிய அணி இலங்கையை வீழ்த்தும் என நினைத்திருக்கவில்லை. அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சிய அணியினையும் அவ்வாறே அனைவரும் எண்ணுவர். ஆனால் இலங்கை அணிக்கு கட்டாய வெற்றி ஒன்றை பெற வேண்டிய அழுத்தம் இருப்பதன் காரணமாக, அதன் மூலம் கிடைக்கும் சாதக நிலைமைகளை கருத்திற் கொண்டு ஐக்கிய அரபு இராச்சிய அணி வரலாற்றை மீண்டும் ஒரு முறை மாற்றி எழுதலாம்.
ஐக்கிய அரபு இராச்சிய அணி தமது முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியினைத் தழுவிய போதும் சிறந்த பந்துவீச்சினை குறித்த போட்டியின் இறுதி நேரம் வரை வெளிப்படுத்தியிருந்தது.
அத்துடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் சிறந்த பந்துவீச்சினை அவ்வணி வீரர்கள் வெளிக்காட்டியிருந்தனர். எனவே தமது பந்துவீச்சை இன்னும் பலப்படுத்தும் போது ஐக்கிய அரபு இராச்சிய அணி இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு அணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மறுமுனையில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் நாளைய போட்டி மிக முக்கியமானதொன்றதாக இருக்கின்றது. அதேநேரம் இலங்கையுடன் தோல்வியினைத் தழுவும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தொடரில் இருந்து வெளியேறுகின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட முடியும். எனவே அவர்களும் வெற்றிக்காக தங்களது 100% முயற்சியினை வழங்க வேண்டும்.
அணி விபரம்
இலங்கை
டில்சான் மதுசங்க இலங்கை கிரிக்கெட் அணியினை விட்டு வெளியேறியது இழப்பு என்ற போதிலும், அவருக்கு பதிலாக இணைக்கப்பட்ட மற்றைய வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுசன் சிறப்பாக செயற்பட்டிருந்தார். அவர் அடுத்த போட்டியிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தனுஷ்க குணத்திலக்கவிற்குப் பதிலாக சரித் அசலன்க அணியில் இணைக்கப்பட எதிர்பார்க்கப்பட முடியும்.
எதிர்பார்ப்பு XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசான்
>> WATCH – நமீபியா போட்டியில் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை கூறும் ஷானக
ஐக்கிய அரபு இராச்சியம்
பெரும்பாலும் நெதர்லாந்து அணியினை எதிர்கொண்ட அதே அணியே இலங்கை மோதலிலும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் அணியின் நம்பிக்கை வீரர்களாக துடுப்பாட்டவீரர் முஹமட் வஸீம், பந்துவீச்சாளர்களில் ஜூனைத் சித்திக் ஆகியோர் காணப்படுகின்றனர்.
எதிர்பார்ப்பு XI – சிராக் சூரி, முஹமட் வஸீம், காசிப் தாவூத், அரவிந்த், சவார் பரீட், பாசில் ஹமீட், சுண்டன்காபொயில் ரிஸ்வான், அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், ஜூனைட் சித்திக், ஸஹூர் கான்
காலநிலை தரவுகள்
போட்டி நடைபெறும் கீலோங் நகர் குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள் நாளை அங்கே போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும் என சுட்டிக் காட்டியிருக்கின்றது. எனவே மழையின் தாக்கம் இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையில் போட்டியில் இல்லாமல் இருக்கும் என நம்ப முடியும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<