இறுதி நேரத்தில் டில்ஷான் உபாதை; அணியில் மேலும் சில மாற்றம்

ICC T20 World Cup 2022

2601

அவுஸ்திரேலியாவின் ஜீலோங்கில் உள்ள கர்டினியா பார்க் மைதானத்தில் நமீபியாவுக்கு எதிராக நாளை (16) நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டிக்கு முகங்கொடுக்க இலங்கை அணி தயாராகி வரும் நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் இறுதிப் பயிற்சியின் போது நான்கு பந்துகளை மட்டுமே வீசிய பின்னர், மதுஷங்க தனது இடுப்பைப் பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் உபாதையின் தற்போதைய நிலை குறித்து இன்னும் உறுதியாக எதுவும் கூற முடியாது என்று இலங்கை அணியின் உதவிப் பயிற்சியாளர் நவீட் நவாஸ் கூறியுள்ளார்.

20 வயதான இடது கை வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுஷங்க அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார். அங்கு அவர் 25.83 என்ற சராசரியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எனினும் நாளைய (16) போட்டியில் டில்ஷான் மதுஷங்க விளையாடாவிடின், அவருக்குப் பதிலாக லஹிரு குமாரவுக்கு இறுதிப் பதினொருவர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் துஷ்மந்த சமிர மற்றும் லஹிரு குமார ஆகிய இருவரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். எனினும், குறித்த தொடருக்குப் பிறகு லஹிரு குமாராவால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த அவர், மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை.

இதனிடையே, கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சரித் அசலங்க, நமீபியாவுடன் நாளை நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனஞ்ஜய டி சில்வா மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது மற்றும் நான்காவது இலக்கங்களில் களமிறங்கவுள்ளனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<