அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மினி மரதன் ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமன் கீரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதேவேளை, பெண்களுக்கான மினி மரதனில் போட்டியிட்ட வட மாகாணம் – இளவாழை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை மாணவி எல். மேரி வினுஷா (ஒரு மணித்தியாலயம் 45.32 செக்.) 5ஆவது இடத்தையும் ஊவா மாகாணம் – பண்டாரவளை தமிழ் வித்தியாலய மாணவி தியாகராஜ் மோனப்பிரியா (ஒரு மணித்தியாலயம் 49.03 செக்.) 7ஆவது இடத்தையும் பெற்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை இந்த ஆண்டு முதல் மீண்டும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ள இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 31 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
- தேசிய விளையாட்டு விழா மரதனில் கிழக்கு மாகாண வீரருக்கு தங்கம்
- இராணுவ அரை மரதனில் அசைக்க முடியாத வீரராக சண்முகேஸ்வரன்
- ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் 8 இலங்கை வீரர்கள்
இதன்படி, கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் விளயாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 21 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மரதன் ஓட்டப் போட்டி கடந்த 8ஆம் திகதி கம்பஹாவில் நடைபெற்றது.
16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட மினி மரதன் ஓட்டப் போட்டியில் 450 வீரர்களும், 150 வீராங்கனைகளும் பங்குபற்றியிருந்தனர்.
இதில் ஆண்களுக்கான மினி மரதன் ஓட்டப் போட்டியை ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்கள் 38 செக்கன்களில் ஓடி முடித்த மேல் மாகாணம் – மொரட்டுவை மகா வித்தியாலய மாணவன் சதீப்ப அனுசன்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அவருக்கு பலத்த சவாலைக் கொடுத்த வட மாகாணம் – கிளிநொச்சி, முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் சுமன் கீரன், போட்டியை ஒரு மணித்தியாலம் 16 நிமிடங்கள் 31 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
எவ்வாறாயினும், 0.53 செக்கன் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
இந்த நிலையில், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மினி மரதன் ஓட்டப் போட்டி வரலாற்றில் கிளிநொச்சி மாணவன் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.
றொஸ்கோ அற்புதராசாவிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சுமன் கீரன், அண்மையில் நிறைவடைந்த 2022ஆம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 1500 மீட்டர், 800 மீட்டர், 5000 மீட்டர் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை சுவீகரித்து சாதானை படைத்துள்ளார்.
அத்துடன்,ஆண்களுக்கான 20 வயதின் கீழ் பிரிவில் சிறந்த வீரருக்கான விருதினையும் தட்டிச் சென்றார்.
இதனிடையே, மேல் மாகாணம் – கம்பஹா மிரிஸ்வத்த தேசிய பாடசாலை மாணவன் தில்ஹார லக்ஷான் (ஒரு மணித்தியாலயம் 17.00 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான மினி மரதன் ஓட்டப் போட்டியில் மேல் மாகாணம் – பான்திய மகா வித்தியாலய மாணவி பேஷலிகா மதுவன்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலயம் 34 நிமிடங்கள் 52 செக்கன்களில் நிறைவு செய்தார்.
மேல் மாகாணம் – கொழும்பு அமலமரி மகளிர் வித்தியாலய மாணவி ஓஷாதினி நிலுமிகா (ஒரு மணித்தியாலயம் 35.08 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாணம் – சேனாபதி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிலா சிறிவர்தன (ஒரு மணித்தியாலயம் 37:01 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<