இந்தோனேசிய உயிரிழப்பு சம்பவத்திற்கு ஐரோப்பிய அணிகள் அஞ்சலி

293
Facebook

இந்தோனேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற கால்பந்து போட்டியொன்றில் இடம்பெற்ற கலவரத்தினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஐரோப்பிய கால்பந்து ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அனைத்து  கால்பந்து  போட்டிகளுக்கும் முன்னதாக 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தோனேசியாவின் கால்பந்து லீக் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற முக்கிய போட்டியில் அரிமா மலங் மற்றும் ஈஸ்ட் ஜாவா அணிகள்  மோதின.  இந்த ஆட்டத்தில், அரிமா மலங் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் ஈஸ்ட் ஜாவா அணியிடம் தோற்றது.

அதன் பின்னர் சொந்த மைதான அணியான  அரிமா மலங் ரசிகர்களினால் ஆரம்பிக்கப்பட்ட  கலவரம் காரணமாக 125 பேர் உயிரிழப்புக்கும், 320 இற்கும் அதிகமானோர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகினர். உலக கால்பந்து ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வானது, பல தரப்பினரதும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடாத்தப்படும் சம்பியன்ஸ் லீக்கில், இந்த வார போட்டிகள் அனைத்தும் ஆரம்பிக்க முதல், இரு அணி வீரர்களினாலும் இந்த சம்பவத்தினை நினைவுகூரும் வகையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த வாரம் இடம்பெற்ற 16 போட்டிகளிலும் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இனி நடைபெறவிருக்கும் ஐரோப்பா லீக் மற்றும் கோன்பிரன்ஸ் லீக் போட்டித் தொடர்களிலும் இந்த முறைமை பின்பற்றப்படும் என  ஐரோப்பிய கால்பந்து ஒன்றியம் அறிவித்துள்ளது.

                         >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<