தேசிய தேர்வுக் குழுவில் சனத்துக்கு முக்கிய பதவி

1601

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஏழு பேர் கொண்ட தேசிய தேர்வுக் குழு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை (04) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் சனத் ஜயசூரியவுடன் முன்னாள் தேசிய டென்னிஸ் வீரர் அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ, முன்னாள் தேசிய றக்பி வீரர் வைத்தியர் மய்யா குணசேகர மற்றும் முன்னாள் தேசிய மெய்வல்லுனர் மற்றும் வலைபந்தாட்ட வீராங்கனை திலக்கா ஜினதாச உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிய பிறகு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர்,

”விளையாட்டுத்துறை சங்கங்கள் அல்லது சம்மேளனங்களினால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவினால் வீரர்கள் அல்லது வீராங்கனைகள் தெரிவு செய்யப்படும்போது யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து 7 தினங்களுக்குள் அமைச்சரான தன்னிடம் அல்லது தேசிய விளையாட்டுத்துறைப் பேரவை அல்லது தேசிய தேர்வுக் குழுவிடம் மேன்முறையீடு செய்யலாம்.

”விளையாட்டுத்துறை பற்றிய நடைமுறை அறிவுகொண்ட, விளையாட்டுத்துறையை நேசிக்கும், விளையாட்டுத்துறை தொடர்பாக கவனம் செலுத்தும் ஒரு குழுவினரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். விளையாட்டுத்துறையில் தேவைகளை நிறைவேற்றுவது இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும். தெரிவுகளின் மூலமே ஒரு விளையாட்டு வீரரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து எமக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் அவரது பிள்ளைதான் ஹீரோ. அதில் எவ்வித விவாதத்திற்கும் இடம் இல்லை. அந்த வீரர் அல்லது வீராங்கனையின் திறமை குறித்து அளவிடுவதும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது குறித்து ஆராய்வதும் தேசிய தேர்வுக் குழுவின் பொறுப்பாகும். இந்த நாட்டில் விளையாட்டுத் துறைக்காகவும் விளையாட்டு வீர வீராங்கனைக்காகவும் அந்தப் பொறுப்பை நியாயமாக நிறைவேற்றுவது அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, ”விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய பொறுப்பை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவோம். தேசிய தேர்வுக் குழு சுதந்திரமானது.

விளையாட்டு வீரர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் இலங்கையின் பெயரை உலகத்தின் முன் உயர்த்துவதும் எமது பணியாகும். இந்தக் குழுவில் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். எனவே, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வீரர்களுக்காக அர்ப்பணிக்க முடியும்” என்றார்.

தேசிய தேர்வுக் குழு விபரம்

முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா (தலைவர்), முன்னாள் தேசிய டென்னிஸ் வீரர் அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ (செயலாளர்), முன்னாள் தேசிய றக்பி வீரர் வைத்தியர் மய்யா குணசேகர, இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசன்ன சண்டித், முன்னாள் தேசிய கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய, தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, முன்னாள் தேசிய மெய்வல்லுனர் மற்றும் வலைபந்தாட்ட வீராங்கனை திலக்கா ஜினதாச

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<