125 உயிர்களை பலிகொண்ட இந்தோனேசிய கால்பந்து போட்டி

500
Nearly 130 died in Indonesia soccer game
Image Courtesy - CNN

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டியொன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றினால் குறைந்தது 125 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் கால்பந்து லீக் தொடரில் இடம்பெற்ற முக்கிய போட்டியில் அரிமா மலங் மற்றும் ஈஸ்ட் ஜாவா அணிகள் ஞாயிற்றுக்கிழமை (02) மோதின. அரிமா மலங் அணியின் சொந்த மைதானமான கஞ்சுருஹன் அரங்கில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், அரிமா மலங் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் ஈஸ்ட் ஜாவா அணியிடம் தோற்றது.

இந்த போட்டி முடிந்தவுடன் இரு தரப்பு அணிகளின் ரசிகர்கள் மத்தியில் சண்டை மூண்டது. இதன் விளைவாக இந்தோனேசிய பொலிசார் மைதானத்தில் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொள்ள வேண்டி வந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் CNN செய்தி ஊடகத்தினால் வெளியான தகவலின்படி, இந்த கலவரத்தினால் குறைந்தது 125 உயிரிழப்புக்களும், 320 இற்கும் அதிகமானோர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பொலிசாரும் அடங்குவதாக இந்தோனேசிய ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 ஆயிரம் பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க கூடிய இந்த அரங்கில், இப்போட்டியை பார்க்க 42 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்பனையாகியுள்ளன என பின்னர் தெரியவந்துள்ளது. இந்த கலவரத்தை அடக்க பொலிசார் மேற்கொண்ட கண்ணீர் புகை பிரயோகத்தில், பல பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிக பெருமை வாய்ந்த உலக கால்பந்து வரலாற்றிலேயே ஒரு போட்டியொன்றில் ஏற்பட்ட மிகப்பெரும் அசம்பாவிதமாக இந்த சம்பவம் மாறியுள்ளது. 1989 ஆம் ஆண்டில் FA கிண்ண அரையிறுதி போட்டியொன்றில் ஏற்பட்ட கலவரத்தினால் 96 லிவர்பூல் ரசிகர்கள் மரணித்ததன் பின்னர், கால்பந்து போட்டியொன்றில் ஏற்பட்ட மிகப்பெரும் கலவரமாக இது மாறியுள்ளது.

இந்த துயர சமபவத்தினால் அடுத்த வார கால்பந்து போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்படுவதாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்த வருடம் இந்தோனேசியாவில் இடம்பெறவிருந்த 20 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA உலகக்கிண்ண தொடரும் தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<