சங்கக்காரவுக்குப் பிறகு பிக் பேஷ் லீக்கில் ஆடும் முதல் இலங்கையர்

654
Sri Lankan leg-spinner Ruwantha Kellapotha

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் T20 கிரிக்கெட் தொடரில் மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக இலங்கை வீரர் ருவந்த கெலபொத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் இந்த ஆண்டு பிக் பேஷ் லீக் T20i தொடரில் விளையாடவுள்ள முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், 2015-16 பருவகாலத்தில் குமார் சங்கக்காரவுக்குப் பிறகு, பிக் பேஷ் லீக்கில் விளையாடும் முதல் இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

2022-23 பருவகாலத்திற்கான பிக் பேஷ் லீக் T20 தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது. இம்முறை ஏலத்தில் 19 நாடுகளைச் சேர்ந்த 279 வீரர்கள் மொத்தமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், இம்முறை வீரர்கள் ஏலத்திற்காக இலங்கையைச் சேர்ந்த தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன, பானுக ராஜபக்ஷ, லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், துஷான் ஹேமந்த, நிசல தாரக மற்றும் ருவந்த கெல்லபொத்த உள்ளிட்ட 9 வீரர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

ஆனால், இம்முறை வீரர்கள் ஏலத்தின் போது பிக் பேஷ் லீக் T20 தொடருக்காக எந்தவொரு இலங்கை வீரரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், இலங்கை சார்பில் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி தற்போது அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து அங்குள்ள முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்காக விளையாடி வருகின்ற ருவந்த கெலபொத்த, மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Legs Spin சுழல் பந்துவீச்சாளரான ருவந்த, கடந்த விக்டோரியா பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும்

பெற்றார். குறித்த தொடரில் கேசி சவுத் மெல்பேர்ன் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடிய அவர், 46 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல பிக் பேஷ் லீக் தொடருக்கு முன்னதாக ரெனகேட்ஸ் அகடமியால் நடத்தப்பட்ட Top-End’ T20 Tournament சுற்றுப் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், இரண்டு தடவைகள் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

31 வயதான ருவந்த கெல்லபொத்த மாத்தளை புனித தோமியர் கல்லூரியின் பழைய மாணவராவார். இலங்கைக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், முவர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022-23 பருவகாலத்திற்கான பிக் பேஷ் லீக் T20 தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<