இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று சனிக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் யாழ். மத்தியக் கல்லூரி அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், மதீஷ்வரன் சன்ஜயன் மற்றும் என். அஜயின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் யாழ். மத்தியக் கல்லூரி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
300 விக்கெட் மைல்கல்லை எட்டிய பிரபாத் ஜயசூரிய
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி களத்தடுப்பை தெரிவுசெய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய லைசியம் சர்வதேச பாடசாலை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
லைசியம் சர்வதேச பாடசாலை சார்பாக அரித வினால் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, காருண்யன் பொன்கோவன் 48 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டார். பந்துவீச்சில் சுதர்ஷன் அனுசாந்த் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். மத்தியக் கல்லூரி அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களான மதீஷ்வரன் சன்ஜயன் மற்றும் என். அஜய் ஆகியோர் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்த, அணியானது 36.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
சன்ஜயன் 89 ஓட்டங்களையும், என். அஜய் 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, ஜெயதீஷ்வரன் விதுசன் 28 ஓட்டங்களையும், சுதாகரன் சிமில்டன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஷாஹீர் சிபான் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
- லைசியம் சர்வதேச பாடசாலை – 213/10 (50), அரித வினால் 64, காருண்யன் பொன்கோவன் 48, சுதர்ஷன் அனுசாந்த் 38/2
- யாழ். மத்தியக் கல்லூரி – 216/3 (36.5), மதீஷ்வரன் சன்ஜயன் 89, என். அஜய் 39, ஷாஹீர் சிபான் 19/1
- முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<