இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று சனிக்கிழமை (16) நடைபெற்ற போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்தன.
இதேவேளை, 19 வயதின் கீழ் டிவிஷன் – II போட்டியில் இன்றைய தினம், கட்டுநேரிய சென். செபஸ்தியன் கல்லூரிக்கு எதிரான போட்டியில் விளையாடிய யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அக்குரனை அஸ்ஹருக்கு எதிராக அபாரம் காண்பித்த ஆகிப் ; போராடி தோற்றது யாழ். இந்து!
யாழ். மத்தியக் கல்லூரி எதிர் கொழும்பு இந்துக் கல்லூரி
யாழ். மத்தியக் கல்லூரி அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியை எதிர்கொண்டு இன்றைய தினம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியினை பதிவுசெய்துக்கொண்டது.
போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த மத்தியக் கல்லூரி அணி, கொழும்பு இந்துக் கல்லூரி அணியை 102 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. இந்துக் கல்லூரி சார்பாக ஆர்.டிலோஜன் அதிகபட்சமாக 20 ஓட்டங்களை பெற, மத்தியக் கல்லூரியின் விக்னேஷ்வரன் பாருதி 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரஞ்சித்குமார் நியூட்டன் 3 விக்கெட்டுகளையம் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். மத்தியக் கல்லூரி அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்திருந்தாலும், சிறந்த ஓட்டவேகத்துடன் வெற்றியிலக்கை அடைந்தது. மத்தியக் கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்தபோதும் 15 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. யாழ். மத்தியக் கல்லூரி சார்பாக நியூட்டன் 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற, ஆர்.டிலோஜன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கொழும்பு இந்துக் கல்லூரி – 102/10 (42.2), ஆர்.டிலோஜன் 20, விக்னேஷ்வரன் பாருதி 16/4, ரஞ்சித்குமார் நியூட்டன் 32/3
யாழ். மத்தியக் கல்லூரி – 108/6 (15), ரஞ்சித்குமார் நியூட்டன் 20, ஆர்.டிலோஜன் 30/4
முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி எதிர் ஹோமாகம மத்திய மகா வித்தியாலயம்
ஹோமாகம மத்திய மகா வித்தியாலயத்தை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி இலகுவான வெற்றியினை பதிவுசெய்துள்ளது.
மீவனபாலன மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி ஜே. கௌரிசங்கரின் அரைச்சதம் மற்றும் கே.டிலக்ஷனின் துடுப்பாட்ட பங்களிப்புடன் 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
கௌரிசங்கர் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற, டிலக்ஷன் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் தெனுவன் திரிசங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், ஹோமாகம மத்திய மகா வித்தியாலயம் 173 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியபோதும், எஸ்.துபிஷனனின் பந்துவீச்சுக்கு முற்றுமுழுதாக தடுமாறி 40.4 ஓவர்கள் நிறைவில் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
ஹோமாகம அணிசார்பில் சிதும் விஹாங்க அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற, துபிஷனன் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஸ்கந்தவரோதயா கல்லூரி – 172/10 (49.1), ஜே.கௌரிசங்கர் 59, கே.டிலக்ஷன் 31, தெனுவன் திரிசங்க 28/3
ஹோமாகம மத்திய மகா வித்தியாலயம் – 107/10 (40.4), சிதும் விஹானகே 30, எஸ்.துபிஷனன் 30/5
முடிவு – ஸ்கந்தவரோதயா கல்லூரி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி எதிர் கட்டுநேரிய சென். செபஸ்தியன் கல்லூரி
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கட்டுநேரிய சென். செபஸ்தியன் கல்லூரி அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செபஸ்தியன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹசித கவிந்த அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களை பெற, பின்வரிசை துடுப்பாட்ட வீரர் அஷேன் தினுக 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் 41.5 ஓவர்கள் நிறைவில் சென். செபஸ்தியன் கல்லூரி அணி 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பாக அண்டன் அபிஷேக் மற்றும் மொஹனராசா கமல்ராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை சச்சின் கணபதி 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சிறந்தவொரு ஆரம்பத்தை கொடுத்தாலும், மத்தியவரிசை வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறினர்.
இதில் அணித்தலைவர் கமலபாலன் சபேசன் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, சென். ஜோன்ஸ் அணி 43.1 ஓவர்கள் நிறைவில் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் நிமேஷ் மதுஷ்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கட்டுநேரிய சென்.செபஸ்தியன் கல்லூரி – 216/10 (41.5), ஹசித கவிந்த 56, அஷேன் தினுக 36, மோஹனராசா கமல்ராஜ் 35/3, அண்டன் அபிஷேக் 49/3
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி – 169/10 (43.1), கமலபாலன் சபேசன் 43, சச்சின் கணபதி 31, நிமேஷ் மதுசஷ்க 30/3
முடிவு – சென்.ஜோன்ஸ் கல்லூரி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<