T20 உலகக்கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

ICC T20 World Cup 2022

548

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான சகிப் அல் ஹசன் தலைமையிலான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பிரகாசிக்கத் தவறிய அனுபவ வீரரும், முன்னாள் தலைவருமான மஹ்முதுல்லாஹ் ரியாத் பங்களாதேஷ் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியை மஹ்மதுல்லாஹ் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய முஸ்பிகுர் ரஹீம் T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து தற்போது மஹ்மதுல்லாஹ்வும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை அந்த அணிக்கு பின்னடைவைக் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காயம் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரை தவறவிட்ட லிட்டன் தாஸ், யாசிர் அலி ஆகிய இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இது தவிர, நூருல் ஹசன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரும் மீண்டும் பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

அதேபோல, ஆசியக் கிண்ணத்தில் விளையாடிய பர்வேஸ் ஹுசைன், அனாமுல் ஹக், மெஹெதி ஹசன், மொஹமட் நயிம் ஆகிய வீரர்களும் T20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

அவருடன், ஷொரிபுல் இஸ்லாம், சௌம்ய சர்கார் மற்றும் ரிஷாட் ஹொசைன் ஆகிய வீரர்களும் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 அணிகளில் இடம்பிடித்துள்ள பங்களாதேஷ் அணி, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் 2 அணிகளுடன் Group-2 இல் இடம்பிடித்துள்ளது.

பங்களாதேஷ் T20 உலகக் கிண்ண குழாம்:

சகிப் அல் ஹசன் (தலைவர்), சபிர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் மிராஸ், அபிஃப் ஹொசைன், மொஸாடிக் ஹொசைன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நூருல் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், மொஹமட் சைபுதீன், தஸ்கின் அஹமட், எபாதத் ஹொசைன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, நசும் அஹ்மட்.

மேலதிக வீரர்கள்: மெஹெதி ஹசன், ஷாரிபுல் இஸ்லாம், சௌம்ய சர்கார், ரிஷாட் ஹொசைன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<