லெஜன்ட்ஸ் தொடரில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட இலங்கை

15804

வீதி பாதுகாப்பினை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும், Road Safety World Series லெஜன்ட்ஸ் T20 தொடரில் இலங்கை அவுஸ்திரேலிய அணியினை 38 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை அணிக்கு லெஜன்ட்ஸ்  தொடரின் முதல் போட்டியாகவும், தொடரின் மூன்றாவது போட்டியாகவும் மாறிய இந்த மோதல் நேற்று (11) இந்தியாவின் கான்பூர் நகரில் ஆரம்பமாகியது.

இளம் படையுடன் ஆசியக்கிண்ணத்தை வென்றது இலங்கை!

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணித் தலைவர் திலகரட்ன டில்சான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது தரப்பிற்காகப் பெற்றார். இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி டில்சான் முனவீர மற்றும் திலகரட்ன டில்சான் ஆகியோரின் அபார ஆட்டங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தில் சதம் விளாசிய திலகரட்ன டில்சான் வெறும் 56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 14 பெளண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் டில்சான் முனவீர 63 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் உடன் 95 ஓட்டங்கள் பெற்றார்.

இதேநேரம் அவுஸ்திரேலிய பந்துவீச்சு சார்பில் பிரட் லீ ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 219 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 180 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இலங்கை அணியை வாழ்த்த Dialog இனால் ‘Wishing Portal’ அறிமுகம்

அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தில் அதிரடியாக துடுப்பாடி போராட்டம் காட்டிய நேதன் ரீர்டோன் 19 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி பந்துவீச்சில் நுவன் குலசேகர 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சத்துரங்க டி சில்வா மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை லெஜன்ட்ஸ் அணி, Road Safety World Series தொடரினை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கின்றது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை லெஜன்ட்ஸ் அணித்தலைவர் திலகரட்ன டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை லெஜன்ட்ஸ் – 218/1 (20) திலகரட்ன டில்சான் 107(56), டில்சான் முனவீர 95(63)*, ப்ரட் லீ 45/1(4)

அவுஸ்திரேலிய லெஜென்ட்ஸ் – 180 (18) நேதன் ரீர்டன் 46(19)*, நுவன் குலசேகர 36/4(4), ஜீவன் மெண்டிஸ் 14/2(2), சத்துரங்க டி சில்வா 32/2(4)

முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் 38 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<