தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி லீக் போட்டியில் 1-0 என மாலைதீவுகள் அணியை வெற்றிகொண்ட இலங்கை அணியினர், தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற A குழுவுக்கான போட்டிகளில் இலங்கை அணி 5-1 எனவும், மாலைதீவுகள் அணி 5-0 எனவும் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டிருந்தன. எனவே, பங்களாதேஷ் ஏற்கனவே அரையிறுதிக்கு தெரிவாகியிருந்த நிலையில், இந்தப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக இருந்தது.
இந்நிலையில் ஆரம்பமாக இப்போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் வைத்து இலங்கை அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது பரீக் அஹமட் உதைந்த பந்தை மாலைதீவுகள் கோல் காப்பாளர் ரசீப் தடுக்கும் போது, பந்து கையில் இருந்து நழுவ, அதனை இலங்கை வீரர் முபாஸ் கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
- தனியாக நின்று பங்களாதேஷுக்கு சவால் கொடுத்த றிஹாஸ்
- SAFF சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வருவதே இலங்கையின் இலக்கு – அருன சம்பத்
- SAFF 17 வயதின் கீழ் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
- இலங்கை மகளிர் குழாத்தில் வடக்கு, மலையக வீராங்கனைகள் இணைவு
அதன் பின்பும் இலங்கை வீரர்கள் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் கோல் பெறப்படாத நிலையில், மறுமுனையில் மாலைதீவுகள் வீரர்கள் பெற்ற கோலுக்கான முயற்சிகளை இலங்கை கோல் காப்பாளர் றிஹாஸ் இலகுவாகத் தடுத்தார்.
குறிப்பாக, மாலைதீவுகள் அணியின் ஐஹாம் இப்ராஹிம் இலங்கை கோல் எல்லைக்கு வெளியில் இருந்து உதைந்த பந்து கோலின் இடது கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.
எனவே, போட்டியின் முதல் பாதி நிறைவில் இலங்கை அணி முபாஸின் கோலினால் முன்னிலை பெற்றது.
முதல் பாதி: இலங்கை 1 – 0 மாலைதீவுகள்
இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் முழுமையாக இலங்கை வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். அதன் விளைவாக இரண்டாம் பாதியிலும் கோலுக்கான முயற்சிகளை அடுத்தடுத்து மேற்கொண்ட போதும் கோல்கள் பெறப்படாத நிலையில் போட்டி நிறைவடைந்தது.
எனவே, முபாஸின் கோலினால் 1-0 என வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் A குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, இறுதி அணியாக தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதன்படி, A குழுவில் முதலிடம் பெற்ற பங்களாதேஷ் அணி B குழுவில் இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணியையும், A குழுவில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணி B குழுவில் முதலிடம் பெற்ற நேபாள அணியையும் அரையிறுதியில் சந்திக்கவுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் 12ஆம் திகதி திங்கட்கிழமை இடைபெறவுள்ளன.
முழு நேரம்: இலங்கை 1 – 0 மாலைதீவுகள்
கோல் பெற்றவர்கள்
இலங்கை – மொஹமட் முபாஸ் 77’
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
மாலைதீவுகள் – ஜோட் அஷ்பாக் 80’
இந்தியா எதிர் நேபாளம்
குழு B இல் ஏற்கனவே இடம்பெற்ற ஆட்டங்களின் நிறைவில் இந்திய அணி பூட்டான் அணியை 3-0 எனவும், நேபாள அணி பூட்டான் அணியை 2-1 எனவும் வீழ்த்தி ஏற்கனவே, அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் போட்டியாக இடம்பெற்ற இந்த ஆட்டம் குழு B இல் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக அமைந்தது. போட்டியின் 25ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லயிஷ்ராம் இந்திய அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
முதல் கோல் பெறப்பட்டு 10 நிமிடங்களில் நேபாள அணிக்கு மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்த சரொஜ் டலாமி, முதல் பாதி நிறைவடையும் தருவாயில் மத்திய களத்தில் இருந்து சிறந்த முறையில் பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.
மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகிய நிமிடத்தில் இருந்து நேபாள வீரர்கள் கவுண்டர் அட்டக் முறையில் தொடர்ந்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன் விளைவாக இரண்டாம் பாதியிலும் அவ்வணிக்கு உனேஷ் புதாதொகி மற்றும் சுபாஷ் பாமி ஆகியோர் மூலம் 20 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்கள் கிடைக்க, போட்டி நிறைவில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற நேபாள வீரர்கள் குழு B இல் முதலிடம் பெற்றனர்.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<