T20 கிரிக்கெட்டில் சாதனை மழை பொழிந்த விராட் கோஹ்லி

Asia Cup 2022

237

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதல் T20 சதத்தை விளாசிய விராட் கோஹ்லி ஒருசில சாதனைகளை முறியடித்துள்ளார்.

சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைசிறந்த வீரராக வலம் வருபவர் விராட் கோஹ்லி. மூன்று வகை போட்டிகளிலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எனினும், கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காமல் திணறிய அவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் சதமடித்து 1021 நாட்களுக்குப் பின் தனது 71ஆவது சர்வதேச சதத்தை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டிக்கு முன்பாக கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி பங்களாதேஷிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி சதம் அடித்திருந்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் ஹொங் கொங் அணிகளுக்கு எதிராக 2 அரைச் சதங்களை விளாசி மீண்டும் போர்முக்கு திரும்பிய கோஹ்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதுடன், ஒருசில் முக்கிய சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

சர்வதேச T20 கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசிய விராட் கோஹ்லி, முதல் சதத்திலேயே ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம், சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் (118 எள இலங்கை) சாதனையை விராட் கோஹ்லி முறியடித்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71ஆவது சதத்தைப் பதிவு செய்த அவர், ரிக்கி பொண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரிக்கி பொண்டிங் 668 சர்வதேச இன்னிங்ஸ்களில் 71 சதங்களை விளாசியுள்ளதுடன், விராட் கோஹ்லி 522 இன்னிங்ஸ்களில் 71 சதங்களை விளாசி, 2ஆம் இடத்தை அவருடன் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கர் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியிலில் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். இதுவரை 5 இன்னிஸ்களில் 276 ஓட்டங்களைக் குவித்துளார். அத்துடன், ஒரே போட்டியில் அதிக ஓட்டங்களை அடித்தவரும் கோஹ்லி தான். அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிக பௌண்ட்ரிகள், அதிக அரைச் சதங்கள், அதிக சதங்கள், அதிக சராசரி என அனைத்திலும் விராட் கோஹ்லி முதலிடம் வகிக்கிறார்.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு T20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரராக இடம்பிடித்தார்.

அதுமாத்திரமின்றி, சர்வதேச T20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் பட்டியலில் மீண்டும் விராட் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதுவரை 96 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 3,584 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 32 அரைச் சதங்களும், ஒரு சதமும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆயிரம் ஓட்டங்களை கோஹ்லி கடந்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஆசியக் கிண்ண வரலாற்றில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அதிக ஓட்டங்களைக் குவித்து வருகின்ற வீரர்களில் முதலிடம் வகிக்கின்ற கோஹ்லி, கடந்த 2012, 2016, 2022 என மூன்று ஆண்டுகளிலும் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார். மேலும், ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரரும் விராட் கோலிஹ்யே ஆகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<