அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான 16 பேர்கொண்ட நெதர்லாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து குழாத்தின் தலைவராக அனுபவ துடுப்பாட்ட வீரர் ஸ்கொட் எட்வர்ட்ஸ் பெரிடப்பட்டுள்ளதுடன், அனுபவ சகலதுறை வீரர்களான கொலின் அக்கர்மன், ரொயிலொப் வென் டெர் மேர்வ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
>> த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி
அனுபவம் மற்றும் இளம் என்ற சமபலமான குழாத்தை நெதர்லாந்து கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது. குறிப்பாக நெதர்லாந்து அணி இறுதியாக விளையாடிய பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய முன்னணி அணிகளுடன் தோல்வியடைந்திருந்தாலும், பலமான போட்டிகளை வழங்கியிருந்தது.
குறித்த தொடர்களில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய வீரர்களும் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். டொம் கூப்பர், பிரெட் கிளாசன், ஷிராஸ் அஹ்மட் மற்றும் பிரெண்டன் கிலொவர் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
T20 உலகக்கிண்ணத்துக்கான தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்திருந்தாலும், ஜிம்பாப்வே அணியுடன், நெதர்லாந்து அணி T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றது.
T20 உலகக்கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், நெதர்லாந்து அணி தங்களுடைய முதல் சுற்றுப்போட்டிகளில் இலங்கை, நமீபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து குழாம்
ஸ்கொட் எட்வர்ட்ஸ் (தலைவர்), கொலின் அக்கர்மன், ஷிராஸ் அஹ்மட், லோகன் வென் பீக், டொம் கூப்பர், பிரெண்டன் கிலவெர், டிம் வென் டெர் கூக்டென், பிரெட் கிளாசன், பெஸ் டி லீட், போல் வென் மீகெரன், ரொயிலொப் வென் டெர் மேர்வ், ஸ்டீபன் மெய்பேர்க், டேஜா நிடமநுறு, மெக்ஸ் ஓடொவ்ட், டிம் பிரிங்கல், விக்ரம் சிங்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<