குழுநிலை மோதலுக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா?

340
Sri Lanka vs Afghanistan

ஆசியக் கிண்ண T20I தொடரின் குழுநிலை மோதல்கள் யாவும் நிறைவுற்று, தொடரின் சுபர் 4 சுற்று ஆரம்பித்திருக்கின்றது. இந்த சுற்றின் முதல் போட்டியாக குழு B அணிகளில் இருந்து சுபர் 4 சுற்றுக்கு தெரிவான இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் இன்று (03) நடைபெறவிருக்கின்றது.

>> சாதனை வெற்றியுடன் சுபர் 4 சுற்றுக்குள் பாகிஸ்தான்

ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிர்பாராத அதிர்ச்சியை பரிசளித்த ஆப்கானிஸ்தான், அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் தங்களது ஆற்றல் தொடர்பில் தெளிவான ஒரு அறிக்கையினை (Clear Statement) வழங்கியே வருகின்றது.

ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு, அதிரடித் துடுப்பாட்டம், அசத்தல் களத்தடுப்பு என மூன்று துறைகளிலும் முன்னேறிய T20 அணியாகவே காணப்படுகின்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத காலங்களிலும் ஆப்கான் வீரர்கள் T20 லீக்குகளில் அடிக்கடி பங்கேற்பதன் காரணமாக அதிக அனுபவம் கொண்ட அணித்தரப்பினையே கொண்டிருக்கின்றனர்.

மறுமுனையில் இலங்கை அணியினைப் பொறுத்தவரை நல்ல சமநிலை (Well Balanced) கொண்ட அணியாகவே இந்த முறைக்கான ஆசியக் கிண்ணத்தில் களமிறங்கியிருக்கின்றது. இலங்கை அணியில் திறமைமிக்க துடுப்பாட்டவீரர்களும், பந்துவீச்சாளர்களும் இருந்த போதும் அவர்களின் அனுபவம் போதாத விடயத்தினை கடந்த போட்டிகளில் வெளிக்காட்டிய தடுமாற்றம் பிரதிபலித்திருந்தது. எனினும் தவறுகளை திருத்தும் போது விடயங்கள் சீராகும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அண்மைக்கால பதிவுகளை வைத்து நோக்கும் போது இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக ஆப்கானிஸ்தான் அணிக்கே இருக்கின்றது. வெவ்வேறு எதிரணிகள் என்ற போதும் ஆப்கானிஸ்தான் இந்த ஆண்டில் மொத்தமாக 12 T20I போட்டிகளில் ஆடி 8 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. ஆனால் இலங்கை அணியினைப் பொறுத்தவரை T20I இல் இந்த ஆண்டில் மூன்று வெற்றிகள் மாத்திரமே இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்பது போட்டிகளில் இலங்கை தோல்வியினை தழுவியிருக்கின்றது.

அத்துடன் போட்டி நடைபெறவுள்ள ஷார்ஜா அரங்கு சிறிய மைதான எல்லைகளை கொண்டது என்பதால் போட்டியின் வெற்றியினை நாணய சுழற்சியும் தீர்மானிக்கும். அதாவது இரண்டாவது துடுப்பாட்டம் தெரிவு செய்யும் அணிக்கு வெற்றிக்கான அதிக வாய்ப்புக்கள் உண்டு.

இலங்கை அணி சரி செய்ய வேண்டியவை

இலங்கை அணி புதிய ஆரம்ப வரிசையினை (Opening Batting Combination) ஆசியக் கிண்ண T20 தொடரில் பயன்படுத்துகின்றது. புதிய பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட், உதவிப் பயிற்சியாளர் நவீட் நவாஸ் ஆகியோரின் வியூகமாக இது இருக்க முடியும். தரவுகள் 2021ஆம் ஆண்டிலிருந்து 11 வெவ்வேறு ஆரம்ப துடுப்பாட்டவரிசைகளை இலங்கை T20I போட்டிகளில் பயன்படுத்தியாக குறிப்பிடுகின்றன. புதிய துடுப்பாட்ட வரிசை இம்முறை வெற்றிகரமாக மாறினால் சிறப்பாக இருக்கும். அத்தோடு இலங்கை இங்கே குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் பவர் பிளே குறைந்த ஓட்டவீதத்துடன் (Lower Run Rate) உடன் ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது அணியாகவும் மோசமான சாதனையினைப் பதிவு செய்திருக்கின்றது. எனவே துடுப்பாட்டவீரர்களே பந்துவீச்சினை விட இலங்கையின் அணியின் வெற்றியினை இன்றைய நாளில் தீர்மானிக்கப் போகின்றனர்.

>> சாதனை வெற்றியுடன் சுபர் 4 சுற்றுக்குள் பாகிஸ்தான்

T20 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கு துடுப்பாட்டமே காரணம் என்பது மறுப்பதிற்கில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க ஆகியோர் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன்னர் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் T20 வெற்றி ஒன்றினை பதிவு செய்யும் போது, அப்போட்டியில் குசல் மெண்டிஸ் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். உள்ளூர் போட்டிகளிலும் அவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் தனது நம்பிக்கையினை தளராமல் வைத்திருப்பார் எனில் இன்றைய நாளிலும், அரங்கு அதிரும் ஆட்டம் ஒன்றை எதிர்பார்க்க முடியும்.

இன்னும் இலங்கை இரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற பானுக ராஜபக்ஷ இரண்டு குழுநிலைப் போட்டிகளிலும் ஏமாற்றிய சரித் அசலன்க, ஆரம்பவீரர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் தங்களது பாத்திரங்கள் (Roles) தொடர்பில் அறிந்து பொறுப்பாக ஆடும் போது இலங்கை அணியின் துடுப்பாட்டம் இன்னும் பலம் பெறும்.

ஆப்கானிஸ்தானின் பலம்

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி 105 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை வெறும் 11 ஓவர்களுக்குள் விரட்டியிருந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு நஜிபுல்லா சத்ரான் துடுப்பாட்டவீரராக மிகப் பெரும் நம்பிக்கை தருகின்றார். அதாவது ஆப்கானிஸ்தானின் மிகப் பெரும் துடுப்பாட்டப் பலம் அவரே. 2020ஆம் ஆண்டிலிருந்து 614 ஓட்டங்களை T20I போட்டிகளில் பெற்றிருக்கும் நஜிபுல்லா சத்ரான் 41 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருப்பதோடு, அவரின் Strike Rate 151.6 ஆக காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் ”குட்டி கிறிஸ் கெயில்” ஆக இருக்கும் அவர் குறிப்பிட்ட காலப்பகுதியில் 5 அரைச்சதங்களையும் விளாசியிருக்கின்றார். எனவே அவரின் அசுர ஆட்டம் வெளிப்படும் போது, இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகவும் நெருக்கடி உருவாகும்.

>> “ஆப்கானிஸ்தானிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்” – பானுக ராஜபக்ஷ

ரஷீட் கான் VS வனிந்து ஹஸரங்க

உலகத் தரமிக்க மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இரண்டு பேரினையும் இரு அணிகளும் கொண்டிருக்கின்றன. இருவரிலும் அனுபவ ரீதியில் ரஷீட் கான் முன்னணியில் திகழ்கின்ற போதும், வனிந்து ஹஸரங்கவின் அண்மைக்கால பதிவுகளும் பிரம்மிக்க வைக்கின்றன.

மைதானமும் சுழல் பந்துவீச்சுக்கு பெரும் சாதகமாக இருக்கும் என்பதால் கிட்டத்தட்ட 500 T20 விக்கெட்டுக்களை நெருங்கியிருக்கும் ரஷீட் கானுக்கும், புதிய நட்சத்திரம் வனிந்து ஹஸரங்கவிற்கும் நடக்கும் பனிப்போராக இன்றைய மோதல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அணி விபரங்கள்

இரு அணிகளிலும் மாற்றங்கள் இருக்க சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லை. எந்த உபாதைச் செய்திகளும் இரு அணிகள் மூலமும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே குழுநிலைப் போட்டிகளில் ஆடியே அதே அணிகளினையே இரு அணிகளும் களமிறக்க எதிர்பார்க்க முடியும்.

எதிர்பார்ப்பு XI (இலங்கை) – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க

எதிர்பார்ப்பு XI (ஆப்கானிஸ்தான்) – ஹஸ்ரத்துல்லா சஷாய், றஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி (தலைவர்), கரீம் ஜனாட், ரஷீட் கான், அஷ்மத்துல்லா ஒமர்சாய், நவீன்-உல்-ஹக், முஜிபுர்-ரஹ்மான், பஷால் ஹக் பரூகி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<