“ஆப்கானிஸ்தானிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்” – பானுக ராஜபக்ஷ

Asia Cup 2022

529

ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து ஏற்கனவே பாடம் கற்றுக்கொண்டோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி, வியாழக்கிழமை (01) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இலங்கையின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்

இந்த நிலையில் சுபர் 4 சுற்றில் தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. ஏற்கனவே முதல் சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சுபர் 4 சுற்று போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பானுக ராஜபக்ஷ, “முதல் போட்டிக்கு முன்னர் நாம் இரண்டு நாட்கள் மாத்திரமே பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். அதனால் ஆயத்தங்களை சரியாக செய்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இதனை காரணமாக கூறமுடியாது. இலங்கை என்ற ரீதியில் நாம் பாரிய தொடர்களில் விளையாடியுள்ளோம். ஆப்கானிஸ்தான் அணியை தற்போது கணித்திருக்கிறோம்” என்றார்.

அதேநேரம், சர்வதேச லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும், முதல் போட்டியின் தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

“நான், தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் லீக் தொடர்களில் விளையாடியுள்ளோம். அதன்மூலம் ஆப்கானிஸ்தான் வீரர்களை கனித்து வைத்திருக்கிறோம். எமது ஏனைய 8 வீரர்களை போன்று, ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் அதிகமானோர் தேசிய அணிக்காக மாத்திரமே விளையாடியுள்ளனர். முதல் போட்டியில் விளையாடி பாடத்தை கற்றுக்கொண்டுள்ளோம்.

அடுத்த போட்டியில் அவர்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாடுவார்கள் மற்றும் எவ்வாறு பந்துவீசுவார்கள் என அறிந்துவைத்திருக்கிறோம். எனவே, எமது நூறு சதவீதத்தையும் கொடுக்க எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.

ஆசியக்கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்று சனிக்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சார்ஜாவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<