ஆப்கானிஸ்தானைவிட அனுபவ ரீதியில் நாம் பலமானவர்கள்” – பானுக ராஜபக்ஷ

Asia Cup 2022

1069

ஆப்கானிஸ்தான் அணியைவிட அனுபவ ரீதியில், எமது அணி முன்னிலையில் இருப்பதாக இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளைய தினம் (27) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

>> ஆசியக் கிண்ணத்தில் விக்கெட் வேட்டையாடியவர்கள்

இந்தப்போட்டி மற்றும் போட்டித் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டி குறித்து பானுக ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் குறிப்பிட்ட பானுக ராஜபக்ஷ, “ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடுவதில் எமக்கு சில சாதகங்கள் இருக்கின்றன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளோம்.

அனுபவ ரீதியில் பார்க்கும் போது நாம் சற்று முன்னிலையில் இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் அணியை இலகுவாக கணிக்க முடியாது. ஆனால் எமது தயார்படுத்தல்கள் சிறந்த நிலையில் உள்ளன.

எம்முடைய தயார்படுத்தல்கள் சிறப்பாக உள்ளதால், ஆப்கானிஸ்தனுக்கு எதிராக சிறந்த போட்டியை கொடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

ஆசியக்கிண்ணத் தொடரானது ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெறவிருந்த போதும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டது. குறித்த இந்த விடயம் அணியின் பிரகாசிப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது தொடர்பிலும் பானுக ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியுள்ளார்.

“ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடுவதில் சாதகங்கள் இருக்கின்றன என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆடுகளங்கள் ஒரே மாதிரியான தன்மைகளை கொண்டவை. எமது அதிகமான வீரர்கள் இங்கு நடைபெற்ற லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இலங்கையில் தொடரை நடத்தமுடியாமை எமது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகும். எனினும் இங்கு போட்டியை நடத்தும் உரிமத்தை நாம் கொண்டிருக்கிறோம். நாம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற பலமான அணிகளை எதிர்கொள்ளவேண்டும். அதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதேவேளை தன்னுடைய துடுப்பாட்ட பிரகாசிப்புகள் மூலமாக  அணிக்காக ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பானுக ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். “இங்கு (ஐக்கிய அரபு இராச்சியம்) கடைசியாக நடைபெற்ற உலகக்கிண்ணத்தில் சிறப்பாக ஓட்டங்களை குவித்திருந்தேன் என தனிப்பட்ட ரீதியில் கருதுகின்றேன். அணிக்கு தேவையான நேரங்களில் தேவையான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தேன்.

ஷார்ஜா மற்றும் டுபாய் மைதானங்களில் அதிகமாக விளையாடியுள்ளேன். ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். இந்த தொடரில் அணிக்கு தேவையான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என சுட்டிக்காட்டினார்.

ஆசியக்கிண்ணத் தொடர் நாளைய தினம் (27) ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை அணியானது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<