உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த வீரருக்கு பிக் பேஷ் லீக் (BBL) வரைவில் வாய்ப்பு!

Big Bash League 2022-23

261

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் 2022-23 பருவகாலத்தின் வீரர்கள் வரைவுக்கான இறுதிப்பட்டியலில் இலங்கையின் மேலும் ஒரு வீரர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் பரிந்துரைப்புக்கான காலம் நிறைவடைந்திருந்த போதும், இறுதியான பட்டியலில் இடம்பெறுவதற்கு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இறுதிக்கட்ட அறிவிப்பின்படி 20 நாடுகளிலிருந்து மொத்தமாக 332 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பிக் பேஷ் லீக் (BBL) வீரர்கள் வரைவில் மேலும் மூன்று வீரர்கள்

ஏற்கனவே இலங்கை அணியைச் சேர்ந்த தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன, பானுக ராஜபக்ஷ மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய 5 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் வெளியான பட்டியலில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவந்த துஷான் ஹேமந்த மற்றும் ருவாந்த கெல்லபொத்த ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

தற்போது வெளியாகியுள்ள இறுதிப்பட்டியலை பொருத்தவரை இலங்கையில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் வேகப்பந்துவீச்சாளர் நிசால தாரகவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிசால தாரகவுக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், 73 முதற்தர போட்டிகளில் 165 விக்கெட்டுகளையும், 79 லிஸ்ட் ஏ போட்டிகளில் 86 விக்கெட்டுகளையும், T20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், முன்னணி சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, இலங்கை அணியின் சர்வதேச தொடர்களை கருத்திற்கொண்டு (இந்திய தொடர்) பிக் பேஷ் லீக் வரைவிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

பிக் பேஷ் லீக் போட்டித்தொடருக்கான வீரர்கள் வரைவு இம்மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ளதுடன், போட்டித்தொடர் எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்

தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன, பானுக ராஜபக்ஷ, லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், துஷான் ஹேமந்த, ருவாந்த கெல்லபொத்த, நிசால தாரக

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<