SLC அழைப்பு T20 தொடரின் சிறந்த பதினொருவர் அணி!

SLC Invitational T20 League 2022

1384

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுமுடிந்த SLC அழைப்பு T20 தொடரின் சம்பியனாக குசல் மெண்டிஸ் தலைமையிலான SLC ரெட்ஸ் அணி, SLC புளூஸ் அணியை வீழ்த்தி சம்பியனாக முடிசூடியிருந்தது.

இந்தப்போட்டித்தொடரில் இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் என சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தனர். குறித்த இந்த பிரகாசிப்புகளின் அடிப்படையில் எமது இணையத்தளத்தால் தெரிவுசெய்ப்பட்ட சிறந்த பதினொருவர் அணி இதோ!

அழைப்பு T20 தொடரின் சம்பியனாக குசல் மெண்டிஸின் ரெட்ஸ் அணி

  1. குசல் மெண்டிஸ் (தலைவர்)

குசல் மெண்டிஸ் அணித்தலைவராகவும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார். SLC ரெட்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு அணிக்கு கிண்ணத்தை வென்றுக்கொடுக்க முக்கிய காரணமாகவும் இவர் இருந்தார்.

ஒவ்வொரு போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பங்களை பெற்றுக்கொடுத்த இவர், SLC புளூஸ் அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டி மற்றும் இறுதிப்போட்டியில் அரைச்சதங்களை பதிவுசெய்திருந்தார். இதில், இறுதி லீக் போட்டியில் 86 ஓட்டங்களை குவித்திருந்த இவர், மொத்தமாக 4 போட்டிகளில் 68.66 என்ற சராசரியில் 206 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

  1. லசித் குரூஸ்புள்ளே

இம்முறை நடைபெற்ற SLC அழைப்பு T20 தொடரில் அதிகம் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் லசித் குரூஸ்புள்ளே. SLC கிரேஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் குரூஸ்புள்ளே அரைச்சதம் அடித்தார்.

தொடர்ந்து தன்னுடைய துடுப்பாட்ட பாணி மற்றும் வேகமான ஆரம்ப ஓட்டக்குவிப்பு மூலம் அணிக்கு சிறந்த ஆரம்பங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடிய ஒரு சதம் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

3. நிரோஷன் டிக்வெல்ல (WK)

இலங்கை அணியை பொருத்தவரை T20 குழாத்தில் இடம்பிடிப்பதற்கு போராடிவரும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக நிரோஷன் டிக்வெல்ல உள்ளார்.

டிக்வெல்ல ரெட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ஓட்டங்களை குவித்திருந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தார்.  3 போட்டிகளில் விளையாடி 51.50 என்ற சராசரியில் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

  1. தனுக தாபரே

SLC அழைப்பு T20 தொடரில் கவனத்தை ஈர்த்த மற்றுமொரு இளம் துடுப்பாட்ட வீரர் தனுக தாபரே. இவர் SLC கிரேஸ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஓட்டங்களை குவித்திருந்தார்.

குறிப்பாக கிரீன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த இவர், பவர்-பிளே ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவித்தார். இந்தப்போட்டியில் 40 பந்துகளுக்கு 66 ஓட்டங்களை விளாசியிருந்தார். மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடிய இவர், 104 ஓட்டங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. வனிந்து ஹஸரங்க

கடந்த காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சுழல் பந்துவீச்சாளராக மாத்திரம் தன்னை நிரூபித்துவந்த வனிந்து ஹஸரங்க, மீண்டும் தன்னுடைய துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த தொடரில் சிறந்த சகலதுறை வீரராக தன்னை அடையாளப்படுத்திய ஹஸரங்க 4 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற்றார். இறுதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இவர், புளூஸ் அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டியில் 41 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசியிருந்ததுடன், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

6. அஷேன் பண்டார

அஷேன் பண்டார தொடர்ந்தும் இலங்கை தேசிய அணியில் நுழைவதற்கான கதவை தட்டிக்கொண்டிருக்கும் வீரர். உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்துவரும் இவர், இந்த SLC அழைப்பு T20 தொடரிலும் ஓட்டங்களை குவித்துள்ளார்.

குசல் மெண்டிஸிற்கு அடுத்தப்படியாக அதிக ஓட்டங்களை பிடித்துள்ள இவர், 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 134 ஓட்டங்களை பெற்றிருந்தார். இறுதிப்போட்டியில் புளூஸ் அணி தடுமாறிய போதும், 30 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அரைச்சதங்களை பெறாத போதும், அணிக்கு தேவையான நேரங்களில் ஓட்டங்களை குவிக்கக்கூடிய வல்லமையை கொண்டுள்ள இவர், இலங்கை அணியில் தற்போதுள்ள மிகச்சிறந்த களத்தடுப்பாளராகவும் வலம் வருகின்றார்.

7. சுமிந்த லக்ஷான்

வனிந்து ஹஸரங்கவை போன்று மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான சுமிந்த லக்ஷான், புளூஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 06.14 என்ற ஓட்ட கட்டுப்பாடுடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மத்திய ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய திறமையை இவர் கொண்டுள்ளதுடன், அணிக்கு தேவையான நேரங்களில் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கக்கூடிய துடுப்பாட்ட திறமையையும் கொண்டுள்ளார்.

8. சாமிக்க கருணாரத்ன

சாமிக்க கருணாரத்னவுக்கு இந்த தொடரில் துடுப்பெடுத்தாடுவதற்கான அதிகமான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்திருந்தார்.

சாமிக்க கருணாரத்ன 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், 8 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டக்கட்டுப்பாடுடன் பந்து ஓவர்களை வீசியிருந்தார்.

9. மஹீஷ் தீக்ஷன

T20 கிரிக்கெட்டை பொருத்தவரை எப்போதும் போன்று பந்துவீச்சில் ஓட்டங்களை கட்டுப்படுத்தும் திறமையை மஹீஷ் தீக்ஷன இந்த தொடரிலும் வெளிப்படுத்தியிருந்தார்.

பவர்-பிளே ஓவர்களில் எப்போதும் போன்று ஓட்டங்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை சாய்த்திருந்த இவர், 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன், 5.86 என்ற ஓட்டக்கட்டுப்பாடுடன் இவர் ஓவர்களை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  1. அசித பெர்னாண்டோ

இலங்கை தேசிய அணியை பொருத்தவரை டெஸ்ட் போட்டிகளில் கவனத்தை ஈர்த்திருந்த வேகப்பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோ. இந்தநிலையில் இம்முறை நடைபெற்ற இந்த SLC அழைப்பு T20 தொடரில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

தொடரின் முதல் போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்த இவர், தொடரின் நிறைவில் 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதீகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

11. பிரவீன் ஜயவிக்ரம

SLC புளூஸ் அணிக்காக விக்கெட்டுகளை சாய்க்கக்கூடிய வீரராக பிரவீன் ஜயவிக்ரம மாறியிருந்தார். இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இவர் தொடர்ச்சியாக போட்டிகளில் விக்கெட்டுகளை சாய்த்திருந்ததுடன், ஓட்டங்களையும் கட்டுப்படுத்தியிருந்தார்.

பிரவீன் ஜயவிக்ரம 4 போட்டிகளில் விளையாடி 6.68 என்ற ஓட்டக்கட்டுப்பாடுடன் 7 விக்கெட்டுகளை சாய்த்து அதிகூடிய விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

சுபர் கிங்ஸ் அணியில் இணையும் தீக்ஷன! ; தலைவராகும் டு பிளெசிஸ்!

12. புலின தரங்க – 12வது வீரர்

SLC கிரேஸ் அணிக்காக மிகச்சிறப்பாக பந்துவீசி எதிரணிகளுக்கு புலின தரங்க அழுத்தத்தை கொடுத்திருந்தார். குறிப்பாக கிரீன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இவர், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.

புலின தரங்க கிரேஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியதுடன், 05.61 என்ற ஓட்ட கட்டுப்பாட்டுடன் 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அதேநேரம், புலின தரங்க துடுப்பாட்டத்திலும் தேவையான நேரங்களில் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க்ககூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<