CSA T20 தொடரின் Marquee பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் 10 வீரர்கள்!

South Africa T20 league 2022

1248

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் லீக் (CSA T20) தொடருக்கான 30 முதன்மை வீரர்களின் (Marquee Players) பெயர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள முதன்மை வீரர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 10 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

LPL தொடர் நடைபெறவுள்ள திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இதில் மஹீஷ் தீக்ஷன, மதீஷ பதிரண ஆகிய தேசிய அணியின் இளம் வீரர்களுடன், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் சகலதுறை வீரர் தனன்ஜய லக்ஷான் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதேநேரம் நிரோஷன் டிக்வெல்ல, சீகுகே பிரசன்ன, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரத்ன, நுவான் பிரதீப், அகில தனன்ஜய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இலங்கையைச் சேரந்த முதன்மை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள புதிய T20 லீக் தொடரான ILT20 தொடரில், இலங்கையின் முதன்மைய வீரர்களாக பெயரிடப்பட்ட வனிந்து ஹஸரங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை.

இவ்வாறான இலங்கை வீரர்களுடன் சர்வதேசத்தின் நட்சத்திர வீரர்களான பெப் டு பிளெசிஸ், குயிண்டன் டி கொக், காகிஸோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், இயன் மோர்கன், ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் மொயீன் அலி போன்றோரும் முதன்மை வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த தொடரில் அணிகள் தலா 17 வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன்,  இதில் தென்னாபிரிக்காவின் புதுமுக வீரர் ஒருவரும் இடம்பெறவேண்டும். அதேநேரம், ஒரு அணி விளையாடும் போது நான்கு வெளிநாட்டு வீரர்களை தங்களுடைய அணிகளில் இணைக்கமுடியும்.

குறிப்பாக தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், இந்த ஆறு அணிகளையும் IPL அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ், சென்னை சுபர் கிங்ஸ், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகங்கள் இந்த அணிகளை வாங்கியுள்ளன.

இதேவேளை, இந்த புதிய லீக் தொடரானது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் மற்றும் பங்களாதேஷின் BPL தொடர் நடைபெறும் கால அட்டவணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<