சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரின் எட்டாம் வாரத்திற்கான முதல் இரண்டு போட்டிகளிலும் நிகம்பு யூத் கால்பந்து கழகம் மற்றும் செரண்டிப் கால்பந்து கழகம் என்பன வெற்றி பெற்றுள்ளன.
இதேவேளை, சனிக்கிழமை (6) குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற இருந்த கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் இடையிலான போட்டி, சீரற்ற காலனிலை காரணமாக திங்கட்கிழமை சுகததாச அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நிகம்பு யூத் கா.க எதிர் SLTB வி.க
வெள்ளிக்கிழமை (5) சுகததாச அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விளையாட்டுக் கழக வீரர் யோகேஷ் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
எனினும், முதல் பாதி நிறைவடைய முன்னர் நிகம்பு யூத் வீரர்களான கிறிஸ்டீன் பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவர் நிலூக ஜனித் ஆகியோர் அவ்வணிக்கான இரண்டு கோல்களைப் பெற்று, முதல் பாதியில் நிகம்பு யூத்தை முன்னிலை பெறச் செய்தனர்.
- சொலிட் அணியை அபாரமாக வீழ்த்திய செரண்டிப்
- கிறிஸ்டல் பெலஸ் இலகு வெற்றி; இறுதி நேரத்தில் நிகம்பு யூத்தை வீழ்த்திய பெலிகன்ஸ்
- இலங்கை 17 வயதின் கீழ் கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவு இவ்வாரம்
- SAFF 17 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இலங்கையில்
இரண்டாம் பாதி ஆரம்பித்த 16 நிமிடங்களுக்குள் ஷானக பிரசாத், பிரதீப் பெர்னாண்டோ மற்றும் இளம் வீரர் ஷிமால் ஆகியோர் நிகம்பு யூத் அணிக்காக 3 கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
அதன் பின்னர் மேலதிக கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் போட்டி நிறைவில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் நிகம்பு யூத் அணியினர் போட்டியை இலகுவாக வென்றனர்.
முழு நேரம்: நிகம்பு யூத் கா.க 5 – 1 SLTB வி.க
கோல் பெற்றவர்கள்
- நிகம்பு யூத் கா.க – கிறிஸ்டீன் பெர்னாண்டோ 12’, நிலூக ஜனித் 32’, ஷானக பிரசாத் 48’, பிரதீப் பெர்னாண்டோ 53’, ஷிமால் நஹீர் 61
- SLTB வி.க – விஜேசுன்தரம் யோகேஷ் 8’
இலங்கை பொலிஸ் வி.க எதிர் செரண்டிப் கா.க
சுகததாச அரங்கில் சனிக்கிழமை (6) ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 25 நிமிடங்களுக்குள் எவன்ஸ் மற்றும் பயாஸ் மூலம் செரண்டிப் அணி இரு கோல்களைப் பெற, 30ஆவது நிமிடத்தில் தனுஜன் பொலிஸ் அணிக்கான கோலைப் பெற்றார்.
இந்நிலையில் ஒரு கோல் பின்னிலையில் இரண்டாம் பாதியை ஆரம்பித்த பொலிஸ் அணிக்கு அவ்வணியின் இளம் வீரர் ஷிஷான் பிரபுத்த ஒரு கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார்.
எனினும், ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் எவன்ஸ் செரண்டிப் அணிக்கான மூன்றாவது கோலைப் பெற, அடுத்த 5 நிமிடங்களில் இளம் வீரர் விக்னேஷ் நான்காவது கோலையும் பெற, ஆட்ட நிறைவில் 4-2 என மேலதிக இரண்டு கோல்களால் செரண்டிப் கால்பந்து கழகம் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியினால் பொலிஸ் விளையாட்டுக் கழகம் இந்த தொடரில் இதுவரையில் ஒரு வெற்றியையும் பதிவு செய்யாத அணியாக உள்ளது.
முழு நேரம்: இலங்கை பொலிஸ் வி.க 2 – 4 செரண்டிப் கா.க
கோல் பெற்றவர்கள்
- இலங்கை பொலிஸ் வி.க – அன்தோனி தனுஜன் 30’, ஷிஷான் பிரபுத்த 53’
- செரண்டிப் கா.க – அசன்டெ எவன்ஸ் 13’&72’, மொஹமட் பயாஸ் 24’, விஜேகுமார் விக்னேஷ் 77’
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<