இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் எட்டாவது நாள் நிறைவில் மேலும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை, ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 4 பதக்கங்களை தம்வசப்படுத்தியுள்ளது.
மல்யுத்த வீராங்கனை நெத்மி பொருதொடகே இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்ததுடன், நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், 8வது நாளில் பெட்மிண்டன் போட்டிகளிலும் இலங்கை வீர வீராங்கனைகள் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுகளுக்கு தகுதிபெற்றுள்ளனர்.
>> பெட்மிண்டன், கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றிகளை குவித்த இலங்கை!
எட்டாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்
மெய்வல்லுனர்
1500 மீற்றர் (பெண்கள்)
இலங்கை அணி சார்பில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் பங்கேற்ற கயந்திகா அபேரட்ன 7வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்.
இவர் முதல் சுற்றின் 2வது தெரிவுப் போட்டியில் களமிறங்கியதுடன், போட்டித்தூரத்தை 04.16.97 நிமிடங்களில் நிறைவுசெய்து, 7வது இடத்தை பிடித்துக்கொண்டார்.
நீளம் பாய்தல் (பெண்கள்)
இன்று நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் முதல் சுற்றில் குழு Bயில் இடம்பிடித்திருந்த சாரங்கி சில்வா தன்னுடைய முதல் முயற்சியில் 06.42 மீற்றர் பாய்ந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தார்.
இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதிபெறுவதற்கு 06.50 மீற்றர் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும், இறுதி 12 வீராங்கனைகளில் 10வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு இவர் முன்னேறினார்.
400 மீற்றர் (ஆண்கள்)
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட அரையிறுதியின் மூன்றாவது போட்டியில் போட்டியிட்ட காலிங்க குமாரகே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
காலிங்க குமாரகே முதல் சுற்றில் 46.53 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றாலும், இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 47.00 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து 7வது இடத்தை பிடித்துக்கொண்டார்.
3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம்
பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை நிலானி ரத்நாயக்க 7வது இடத்தை பிடித்துக்கொண்டார். இவர் போட்டித்தூரத்தை 10.00.34 நிமிடங்களில் நிறைவுசெய்திருந்தார். இந்தப்போட்டியின் முதலிடத்தை கென்யாவின் ஜெக்லிச் செப்கொச் (09.15.68 நிமிடங்கள்), இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் எலிசபத் பேர்ட் (09.17.79) மற்றும் மூன்றாவது இடத்தை உகண்டாவின் பேருத் செமுடாய் (09.23.24) ஆகியோர் பிடித்துக்கொண்டனர்.
>> Photos – Commonwealth Games 2022 – Day 07
கடற்கரை கரப்பந்தாட்டம்
கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்களுடைய காலிறுதிப் போட்டிகளில் பங்கேற்றிருந்தன.
இதில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடிய இலங்கை ஆடவர் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டும், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. முதல் செட்டில் இலங்கை அணி 21-16 என வெற்றிபெற்றதுடன், அடுத்த செட்களை 21-16 மற்றும் 09-15 என தோல்வியடைந்தது.
அதேநேரம் மகளிருக்கான காலிறுதிப்போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ள இலங்கை அணி 0-2 என்ற நேர் செட்கள் கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்தப்போட்டியில் விளையாடிய இலங்கை அணியானது 09-21 மற்றும் 11-21 என்ற புள்ளிகள் கணக்கில் செட்களை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தம்
பெண்களுக்கான 57 கிலோகிராம் எடைப்பிரிவின் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற நெத்மி பொருதொடகே இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கெமரூன் வீராங்கனை ஜோசப் எமிலின்னேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நெத்மி பொருதொடகே, அரையிறுதியில் இந்திய வீராங்கனை அன்சு மலிக்கை எதிர்கொண்டார்.
அரையிறுதிப் போட்டியில் 0-10 என தோல்வியடைந்த நெத்மி பொருதொடகே, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை இரீனி சைமெண்டிஸை 10-0 என வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.
இதேவேளை ஆண்களுக்கான 86 கிலோகிராம் எடைப்பிரிவு போட்டியில் பங்கேற்ற சுரேஷ் பெர்னாண்டோ காலிறுதிப் போட்டியில் கனடா வீரர் அலெக்ஸாண்டர் மூரிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து பெண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட சச்சினி வெரதுவகே நைஜீரிய வீராங்கனை எஸ்தர் ஒமோலயோவிடம் காலிறுதிப் போட்டியில் 0-10 என தோல்வியடைந்தார்.
>> Photos – Commonwealth Games 2022 – Day 06
ஸ்குவாஷ்
ஸ்குவாஷ் போட்டித்தொடரில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து காலிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
ரவிந்து லக்சிறி மற்று வகீல் ஷமீல் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் பில்லி கெமரோன் மற்றும் ரிஷ் டவ்லிங்கை எதிர்கொண்டு 0-2 (07-11, 07-11) என தோல்வியடைந்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவு (Plate) காலிறுதிப்போட்டியில் இலங்கையின் சினாலி சந்திமா மற்றும் வகீல் ஷமீல் ஆகியோர் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர். இந்தப்போட்டியில், பார்படோஸின் அமந்தா ஹெய்வூட் மற்றும் ஷோவ்ன் சிம்சன் ஆகியோரை 2-0 என வீழ்த்தியிருந்தனர்.
இதேவேளை மற்றுமொரு (Plate) காலிறுதிப்போட்டியில் விளையாடிய யெஹானி குருப்பு மற்றும் ரவிந்து லக்சிறி ஆகியோர் கயானா அணியிடம் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.
பெட்மிண்டன்
இலங்கை பெட்மிண்டன் அணியை பொருத்தவரையில் இன்றைய தினம் துமிந்து அபேவிக்ரம மற்றும் நிலூக கருணாரத்ன ஆகியோர் ஆடவர் தனிநபர் போட்டியின் காலிறுதிப்போட்டியில் விளையாடினர்.
இதில் இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்கொண்ட துமிந்து அபேவிக்ரம 0-2 என்ற நேர் செட்கள் கணக்கில் தோல்வியடைந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தப்போட்டியை 21-09 மற்றும் 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்டார்.
>> Photos – Commonwealth Games 2022 – Day 05
நிலூக கருணாரத்ன தன்னுடைய தனிநபர் போட்டியில், சிங்கபூர் வீரர் ஜியா ஹெங் தேவை எதிர்கொண்டு 0-2 என்ற நேர் செட்கள் கணக்கில் தோல்வியடைந்தார். இவர் 13-21 மற்றும் 11-21 என இரண்டு செட்களையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இலங்கை பெட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்தும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துவரும், சச்சின் டயஸ் மற்றும் திலினி ஹெந்தேவ ஆகியோர் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட இவர்கள் 2-0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றிபெற்றனர். முதல் செட்டை 21-18 என கைப்பற்றிய இவர்கள், 21-08 என இரண்டாவது செட்டை கைப்பற்றினர். அதன்படி, காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் மார்கஸ் எரிஸ் மற்றும் லோரன் ஸ்மித்தை இன்றைய தினம் (06) எதிர்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சச்சின் டயஸ் மற்றும் புவனேக குணதிலக்க ஆகியோர் 21-12 மற்றும் 21-08 என அஹமட் நிபல் மற்றும் அஜ்பான் ரஷீட் ஆகியோரை 2-0 என வீழ்த்தினர். இவர்கள் தங்களுடைய காலிறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளனர்.
>> Photos – Commonwealth Games 2022 – Day 04
பதக்கப்பட்டியல் விபரம் (எட்டாவது நாள்)
இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் எட்டாவது நாள் போட்டிகள் நிறைவில், 50 தங்கப் பதக்கங்கள் உட்பட 140 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 47 தங்கப்பதக்கங்கள் உட்பட 131 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 19 தங்கப்பதக்கங்கள் உட்பட 67 பதக்கங்களை வென்றுள்ள கனடா மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன. இதேவேளை இலங்கை அணியானது ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தப்பட்டியலில் 26வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
அவுஸ்திரேலியா | 50 | 44 | 46 | 140 |
இங்கிலாந்து | 47 | 46 | 38 | 131 |
கனடா | 19 | 24 | 24 | 67 |
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <