SAFF 17 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இலங்கையில்

289

தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (SAFF) 2022ஆம் ஆண்டுக்காக ஒழுங்கு செய்துள்ள SAFF மகளிர் சம்பியன்ஷிப் கால்பந்து தொடர் மற்றும் 17 வயதின் கீழான (U17) ஆடவர் SAFF கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றுக்கான அணிகள் நிரல்படுத்தல் (Team’s Draw) நிறைவடைந்திருக்கின்றன.

பங்களாதேஷின் டாக்கா நகரில் அணிகள் நிரல்படுத்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த நிகழ்வின் போது மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை நேபாளத்திலும், 17 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் அணிகளுக்கான கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 05ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இலங்கையிலும் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் தெற்காசிய நாடுகள் பிராந்தியத்தில் (SAARC) உள்ள ஏழு நாடுகளும் பங்கேற்கவுள்ளதோடு, 17 வயதின்கீழ் ஆடவர் தொடரில் பாகிஸ்தான் தவிர்ந்த ஏனைய ஆறு நாடுகளும் வெற்றிக்கிண்ணத்திற்காக போராடவிருக்கின்றன.

மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான அணிகள் நிரல்படுத்தலானது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) அணிகள் தரவரிசைக்கு அமைய இடம்பெற்றிருக்க அதில் குழு A இல் தொடரின் நடப்புச் சம்பியன் இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. மறுமுனையில் குழு B இல் தொடரினை நடாத்தவுள்ள நேபாளம், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் மொத்தமாக 12 போட்டிகள் நடாத்தப்படவுள்ளதோடு, தொடரின் ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதலிரண்டு இடங்களை பெறும் தலா இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தெரிவு செய்யப்படும்.

இதேநேரம், 17 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் தொடருக்கான அணிகள் நிரல்படுத்தலும், FIFA அணிகள் தரவரிசை அடிப்படையில் இடம்பெற்றிருப்பதோடு இதில் குழு A இல் தொடரினை நடாத்தும் இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும், குழு B இல் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

ஆடவர் தொடரில் மொத்தம் 9 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு ஒவ்வொரு குழுவின் புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களையுமு் பெறுமு் அணிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கான தெரிவு செய்யப்படும்.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<