மேஜர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இராணுவப்படை தெரிவு

913

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்த 50 ஓவர்கள் கொண்ட மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஏஸ் கெபிடல் அணியை வீழ்த்திய இராணுவப்படை வீரர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாக தம்மை பதிவு செய்தனர்.

டெஸ்ட் தொடரினை சமநிலை செய்த இலங்கை கிரிக்கெட் அணி

இரு அணிகளும் மோதிய இந்த அரையிறுதிப் போட்டி இன்று (30) NCC மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இராணுவப்படை அணியினர் 46.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை எடுத்தனர்.

இராணுவப்படை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சீக்குகே பிரசன்ன அரைச்சதம் தாண்டி 89 ஓட்டங்கள் எடுக்க, மகேஷ் குமார 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம், ஏஸ் கெபிடல் அணியின் பந்துவீச்சில் லசித் குரூஸ்புள்ளே, பிரமோத் ஹெட்டிவத்த, சானக்க தேவிந்த மற்றும் தனுக தாபரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 247 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஏஸ் கெபிடல் அணி 27.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் 123 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

ஏஸ் கெபிடல் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஒசத பெர்னாண்டோ 31 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்திருக்க, சீகுகே பிரசன்ன மற்றும் சுமின்த லக்ஷான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து இராணுவப்படை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கனடா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர்

அதேநேரம், இன்று ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் யூனியன் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகம் இடையிலான மற்றைய அரையிறுதிப் போட்டி, மைதான நிலைமைகள் சரியில்லாததன் காரணமாக நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை – 246 (48.2) சீக்குகே பிரசன்ன 89, மகேஷ் குமார 46, பிரமோத் ஹெட்டிவத்த 2/26

ஏஸ் கெபிடல் – 123 (27.4) ஒசத பெர்னாண்டோ 31, சீக்குகே பிரசன்ன 4/26, சுமின்த லக்ஷான் 4/42

முடிவு – இராணுவப்படை அணி 123 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<