T20I கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்

259

பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைவர் தமிம் இக்பால் சர்வதேச T20I போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நேற்று (16) நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 3க்கு 0 என தொடரைக் கைப்பற்றியதன் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிம் இக்பால் தனது முகநூல் பக்கத்தில், ‘இன்று முதல் சர்வதேச T20I போட்டிகளிலிருந்து நான் ஒய்வு பெறுகிறேன். அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் T20I போட்டிகளில் தொடர்ந்து ஆடுவது குறித்து தமிம் இக்பால் கூறுகையில், ‘T20I கிரிக்கெட்டில் என்னுடைய எதிர்காலம் பற்றி கிரிக்கெட் சபையுடன் விவாதித்தோம். இந்த வருட T20I உலகக் கிண்ணம் வரை நான் விளையாட வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரிகள் என்னை வலியுறுத்தினார்கள்.

ஆனால் எனக்கு வேறு எண்ணம் உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு T20I கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே என் கவனம் இருக்கும். T20I கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எனது சேவை தேவைப்படாது என எண்ணுகிறேன்.

ஆனால் இறைவன் நினைத்தால், கிரிக்கெட் சபைக்கு நான் தேவைப்பட்டால் விளையாட நான் தயார். அப்போது T20I கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி யோசிப்பேன்’ என்று தெரிவித்தார்.

2007 முதல் பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வருகின்ற தமிம் இக்பால், அந்த அணிக்காக T20I போட்டியில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைக் கொண்டவராக வலம்வருகின்றார். அதேபோல, T20I போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த 3ஆவது பங்களாதேஷ் வீரராகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.

இதுவரை 78 T20I போட்டிகளில் விளையாடியுள்ள 33 வயதான தமிம், ஒரு சதம் மற்றும் 7 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 1758 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், அவர் இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஜிம்பாப்வே அணிக்கெதிரான T20I போட்டியில் விளையாடியிருந்தார்.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருது பங்களாதேஷ் அணித்தலைவர் தமிம் இக்பாலுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<