இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களையும் நிறைவு செய்து புதிய பயணம் ஒன்றுக்கு தயாராகியிருக்கின்றது.
அதன்படி இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக தமது சொந்த மண்ணில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு புதிய தலைவர்
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சனிக்கிழமை (16) காலி நகரில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த டெஸ்ட் தொடர் குறித்த முன்னோட்டத்தினைப் பார்ப்போம்.
வரலாறு
பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளையும் பொறுத்தவரை 1982ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. அன்றிலிருந்து இன்று வரை இரு அணிகளும் மொத்தமாக 55 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, பாகிஸ்தான் அணி 20 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி 16 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் இரு அணிகளும் பங்குபற்றிய 19 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-1 எனக் கைப்பற்றியிருந்தது. எனவே 2015ஆம் ஆண்டின் டெஸ்ட் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை காணப்படுகின்றது.
இலங்கை அணி
கடந்த வாரமே டெஸ்ட் போட்டி ஒன்றினை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அதே உத்வேகம், அப்போட்டியில் கிடைத்த தன்னம்பிக்கை என நேர்மறையான விடயங்களோடு பாகிஸ்தான் தொடரினை ஆரம்பிக்கவிருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக இலங்கை குழாத்தினை நோக்கும் போது அவுஸ்திரேலிய தொடரில் ஆடிய அதே அணியே, பாகிஸ்தானையும் எதிர்கொள்கின்றது. எனினும் இந்த தொடரில் இலங்கை டெஸ்ட் அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய, சாமிக்க கருணாரட்ன, லக்ஷித மானசிங்க மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!
இலங்கை அணியினைப் பொறுத்தவரை இலங்கை அணியின் பிரதான துடுப்பாட்டவீரர்களாக இந்த தொடரில் திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இதில் திமுத் கருணாரட்ன அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். தற்போது டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் 7ஆம் இடத்தில் காணப்படும் திமுத் கருணாரட்ன அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போயினும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்வதற்கு அவரின் துடுப்பாட்டமும் காரணமாக அமைந்திருந்தது.
மறுமுனையில் அஞ்சலோ மெதிவ்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சுமார் 1400 ஓட்டங்கள் வரை குவித்திருப்பதோடு, 54.88 என்கிற துடுப்பாட்ட சராசரியினையும் கொண்டிருக்கின்றார். அத்துடன் குசல் மெண்டிஸின் துடுப்பாட்டமும் நல்ல நிலையில் காணப்படுகின்றது. இவர்கள் தவிர தன்னுடைய இறுதி டெஸ்டில் இரட்டைச் சதம் விளாசிய தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா மற்றும் பெதும் நிஸ்ஸங்க போன்றோரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மேலதிக துடுப்பாட்ட பலமாக காணப்படுகின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது சற்று அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களே, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றனர். எனினும் நம்பிக்கைக்குரிய வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ பங்களாதேஷ் தொடரின் பின்னர் அணிக்குள் மீண்டும் வந்திருப்பதோடு, சுழல்பந்துவீச்சாளர்களான பிரபாத் ஜயசூரிய, மகீஷ் தீக்ஷன போன்றோருக்கு தமது திறமையினை மீண்டும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி போன்று ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஒருவருடன் மாத்திரமே ஆடவுள்ளதால் சுழல்பந்துவீச்சாளர்கள் பலருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை குழாம்
திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்னாண்டோ அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரபாத் ஜயசூரிய, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வெண்டர்சே
பாகிஸ்தான் அணி
கடைசியாக தமது சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரினை அவுஸ்திரேலியாவிற்கு எதிராக பறிகொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தமது வடுக்களுக்கு மருந்து தேடிய வண்ணம் இலங்கை மண்ணினை வந்தடைந்திருக்கின்றது.
பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரை 2015ஆம் ஆண்டில் அவர்கள் இலங்கையில் டெஸ்ட் தொடர் ஒன்றினை வெற்றிகொள்வதற்கு காரணமாக இருந்த யாசிர் சாஹ், சுமார் ஒரு வருட ஓய்விற்குப் பின்னர் விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராக இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் அமையவுள்ளது. யாசிர் சாஹ் கடைசியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக இலங்கை வந்திருந்த போது இலங்கை மண்ணில் 24 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே யாசிர் சாஹ்வின் பந்துவீச்சினை பாகிஸ்தான் பெரிதும் இந்த டெஸ்ட் தொடரில் நம்பியிருக்கின்றது.
இலங்கையுடன் மோதும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்துறையினை நோக்கும் போது பாபர் அசாம் அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரராக காணப்படுகின்றார். அத்துடன் டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் காணப்படும் அவர், இரு அணிகளின் வீரர்களை நோக்கும் போது டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் சிறந்த நிலையினைக் கொண்ட வீரராகவும் காணப்படுகின்றார்.
பாபர் அசாம் தவிர பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்துறையானது அனுபவ வீரர் அஷார் அலி, மொஹமட் ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் பவாட் அலாம் போன்ற வீரர்கள் மூலம் பலம் பெறுகின்றது.
அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது யாசிர் சாஹ்வுடன் சேர்த்து சஹீன் அப்ரிடி அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக காணப்படுகின்றார். இவர்களுடன் நஸீம் சாஹ், ஹசன் அலி ஆகியோர் பாகிஸ்தானின் பந்துவீச்சுத்துறைக்கு மேலதிக உறுதியாக காணப்படுகின்றனர். v
பாகிஸ்தான் குழாம்
பாபர் அசாம் (அணித்தலைவர்), மொஹமட் ரிஸ்வான் (பிரதி அணித்தலைவர்), அப்துல்லா சபீக், அஷார் அலி, பஹீம் அஷ்ரப், பவாட் அலாம், ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், மொஹமட் நவாஸ், நஸீம் சாஹ், நௌமான் அலி, சல்மான் அலி அகா, சர்பராஸ் அஹ்மட், சவூத் சகீல், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் சாஹ்
டெஸ்ட் தொடர் அட்டவணை
ஜூலை 16-20 – முதல் டெஸ்ட் – காலி
ஜூலை 24-28 – இரண்டாவது டெஸ்ட் – கொழும்பு
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<