அனுக் பெர்னாண்டோவின் அதிரடியில் பதுரெலிய அணிக்கு வெற்றி

Major Clubs Limited Over Tournament 2022

219

அனுக் பெர்னாண்டோவின் துடுப்பாட்டம், லசிந்து அரோஷ மற்றும் ருச்சிர கோஷிதவின் பந்துவீச்சின் உதவியுடன் களுத்துறை நகர கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் பதுரெலிய கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் நேற்று (11) நடைபெற்ற போட்டியில் களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் மோதின.

மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பதுரெலிய கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

சீரற்ற காநிலை காரணமாக 31 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய களுத்துறை நகர கிரிக்கெட் கழகம், 31 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைக் பெற்றது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தரிந்து சிறிவர்தன 46 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, பந்துவீச்சில் லசிந்து அரோஷ மற்றும் ருச்சிர கோஷித ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 149 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய பதுரெலிய கிரிக்கெட் கழகம் 28.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

பதுரெலிய கழகத்தின் துடுப்பாட்டத்தில் அனுக் பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல்39 ஓட்டங்களை எடுத்தார்.

இம்முறை முதல்தர ஒருநாள் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பதுரெலிய கழகம் பெற்றுக் கொண்ட 3 ஆவது வெற்றி இதுவாகும். மறுபுறத்தில் இதுவரை 7 போட்டிகளில் விளையடியுள்ள களுத்துறை கழகம், அனைத்திலும் தோல்வியைத் தழுவி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 148/8 (31) – தரிந்து சிறிவர்தன 46, தினெத் ஜயகொடி 24, கௌஷான் குலசூரிய 21, லசிந்து அரோஷ 2/22, ருச்சிர கோஷித 2/36

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 149/5 (28.3) – அனுக் பெர்னாண்டோ 39, சாஹித் மன்சூர் 27, விஹான் குணசேகர 23, கௌஷான் குலசூரிய 2/27

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<