இலங்கை டெஸ்ட் அணியில் இருந்தும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான சுரங்க லக்மால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஓய்வினை அறிவித்திருந்தார்.
சுரங்க லக்மாலின் ஓய்வு இலங்கை டெஸ்ட் அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஒருவருக்கான இடத்தினை உருவாக்கியிருக்கும் நிலையில் லக்மாலின் இடத்திற்கு, வரக்கூடிய தகுதி கொண்ட வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்து நோக்குவோம்.
அசித்த பெர்னாண்டோ
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவனாக திகழும் அசித்த பெர்னாண்டோ, சுரங்க லக்மாலின் இடத்தினை எடுத்துக் கொள்ளக் கூடிய பந்துவீச்சாளர்களில் முக்கிய இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.
வலதுகை பந்துவீச்சாளரான அசித்த பெர்னாண்டோ தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சர்வதேச அறிமுகம் பெற்ற போது எதிர்பார்ப்பற்ற வீரராக காணப்பட்ட போதும், சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட பங்களாதேஷ் ஆடுகளங்களில் செய்த மாயாஜாலம் அவர் மீதான நம்பிக்கையினைப் பலப்படுத்தியிருந்தது.
தற்போது இலங்கையின் டெஸ்ட் அணியிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற அசித்த பெர்னாண்டோவின் ஆட்டம் பலம் பெறும் சந்தர்ப்பத்தில் அவர் லக்மாலைப் போன்று இலங்கை டெஸ்ட் அணியின் நிரந்தர பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
லஹிரு குமார
தனது அதீத வேகத்திற்குப் பெயர் போன லஹிரு குமார, 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போது பெரும் எதிர்பார்ப்பிற்குரிய வீரராக காணப்பட்டிருந்தார்.
எனினும் உபாதைகள், அனுபவமற்ற பந்துவீச்சு என்பன லஹிரு குமார இலங்கை டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெறுவதனை தவிர்த்திருந்தது. இன்னும் இளம் வயதிலேயே தேசிய குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டது உள்ளூர் போட்டிகளில் லஹிரு குமாரவிற்கு போதிய அனுபவத்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கவில்லை.
- NSL தொடரில் பந்துவீச்சில் மிரட்டியவர்கள்
- IPL தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்
- IPL இல் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள்
ஆனால், 2018ஆம் ஆண்டு இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கே நடைபெற்ற போட்டிகளில் லஹிரு குமார அசத்தலாக செயற்பட்டிருந்தார். அதேநேரம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்க ஆடுகளங்களிலும் நல்ல பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். இது அவரின் திறமைக்கு சிறந்த சான்றாக அமைந்திருக்கின்றது.
எனவே, சரியாக தயார்ப்படுத்தப்படுவதன் மூலம் இலங்கை டெஸ்ட் அணியின் தூண்களில் ஒன்றாக லஹிரு குமார மாறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
கசுன் ராஜித
இலங்கை அணிக்காக நீண்ட காலத்திற்கு முன்னர் அறிமுகமாகிய மற்றுமொரு பந்துவீச்சாளர். ஆனால் மோசமான ஆட்டம், உபாதைகள் என்பன கசுன் ராஜிதவிற்கு இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பினை இல்லாமல் செய்திருந்தன.
2020ஆம் ஆண்டிற்குப் பின்னர் பங்களாதேஷ் தொடருடன் இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ள கசுன் ராஜித, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றிருக்கின்றார்.
இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது கசுன் ராஜிதவிற்கு மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், கிடைத்த வாய்ப்பினை சரியாக உபயோகம் செய்ய வேண்டிய நிலையிலும் ராஜித காணப்படுகின்றார்.
பங்களாதேஷிற்கு எதிரான தனது மீள்வருகை டெஸ்ட் தொடரில் மொத்தம் 11 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த கசுன் ராஜித, பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினை இலங்கை 1-0 எனக் கைப்பற்றுவதற்கும் தன்னால் முடிந்த பங்களிப்பினை வழங்கியிருந்தார். இன்னும் ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நல்ல ஆட்டத்தினையே வெளிப்படுத்தியிருக்கும் கசுன் ராஜித டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தினை இலங்கை அணியில் உருவாக்கி வருகின்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விஷ்வ பெர்னாண்டோ
இலங்கை டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற இடதுகை பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோவும், சுரங்க லக்மாலின் பிரதியீட்டு வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார்.
அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க ஆடுகளங்களில் திறமையான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருக்கும் விஷ்வ பெர்னாண்டோ மீது இலங்கை கிரிக்கெட் அணியானது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்போதும் நம்பிக்கை கொள்ள முடியும்.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பதிவு செய்த வரலாறு காணாத டெஸ்ட் தொடர் வெற்றியிலும் விஷ்வ பெர்னாண்டோவின் பங்களிப்பு துடுப்பாட்டவீரராக காணப்படுகின்றது. இது பந்துவீச்சுக்கு மேலதிகமாக விஷ்வ பெர்னாண்டோ துடுப்பாட்ட வீரராகவும் பிரகாசிக்க கூடியவர் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
இப்போது உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து நீங்கியிருக்கும் விஷ்வ பெர்னாண்டோ, விரைவில் தேசிய அணியில் இணைந்து கலக்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மொஹமட் சிராஸ்
முன்னதாக இலங்கை குழாத்தினுள் இணைக்கப்பட்ட போதும், வலதுகை வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸிற்கு இன்னும் சர்வதேச அறிமுகம் கிடைக்கவில்லை.
உள்ளூர் போட்டிகளில் தற்போது கோல்ட்ஸ் அணிக்காக ஆடி வருகின்ற மொஹமட் சிராஸிற்கு, இலங்கை கிரிக்கெட் சபை இறுதியாக ஒழுங்கு செய்த நஷனல் சுபர் லீக் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரமே ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. எனினும் அப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சிராஸ், அவுஸ்திரேலிய A அணிக்கான போட்டியிலும் ஆடியிருந்தார்.
தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் மூலமும் தேசிய கிரிக்கெட் அணியின் உத்தேச குழாத்தினுள் உள்வாங்கப்படும் சிராஸ், தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரிவர உபயோகம் செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
டில்ஷான் மதுசங்க
வெறும் 21 வயதேயான டில்ஷான் மதுசங்கவும், இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கின்றார்.
உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமையான பந்துவீச்சு மூலம் ஏற்கனவே தேர்வாளர்களின் கவனத்தினை ஈர்த்திருக்கும் டில்ஷான் மதுசங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்திலும் இடம்பெற்றிருந்தார். தற்போது ஆஸி. அணிக்கு எதிரான குழாத்திலும் இடம்பெற்றுள்ள அவர் வாய்ப்புக்கள் சரியாக வழங்கப்படுமிடத்து வெற்றிகரமான வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<