ஸ்மித், லபுசேங்கின் சதங்களுடன் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா!

Australia tour of Sri Lanka 2022

255

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய 5 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்று பலமான நிலையை அடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி மாற்றங்களின்றி களமிறங்கியதுடன், இலங்கை அணியானது கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு டெஸ்ட் அறிமுகத்தை கொடுத்திருந்தது.

இலங்கை டெஸ்ட் அணியில் மேலும் மாற்றங்கள்

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித

அவுஸ்திரேலிய அணி

டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேங், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஷ் ஹெட், அலெக்ஷ் கெரி, கிரிஸ் கிரீன், பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்வெப்சன், நெதன் லையோன், மிச்சல் ஸ்டார்க்

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட ஆரம்பத்தை பொருத்தவரை டேவிட் வோர்னர், கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தாலும், உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுசேங் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

எனினும் ரமேஷ் மெண்டிஸ் அவுஸ்திரேலிய அணியின் முக்கியமான துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜாவை (37) போவ்ல்ட் முறையில் ஆட்டமிழக்கச்செய்து அணியை மீண்டும் ஆட்டத்துக்கு கொண்டுவர, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லெபுசேங் ஆகியோர் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.

இதற்கிடையில் ரமேஷ் மெண்டிஸ் வீசிய பந்தில் மார்னஸ் லபுசேங் 28 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, ஸ்டம்பிங் வாய்ப்பொன்று கிடைத்தபோதும், நிரோஷன் டிக்வெல்ல அதனை தவறவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட லபுசேங் சிறப்பாக ஓட்டங்களை குவிக்க, மதியபோசன இடைவேளையின் போது அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் ஆரம்பித்த இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வேகமாகவும், இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் துடுப்பெடுத்தாடியது. இதன்மூலம் மார்னஸ் லபுசேங் தன்னுடைய 7வது டெஸ்ட் சதத்தையும், ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதத்தையும் பதிவுசெய்தனர்.

இலங்கை அணி விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு தடுமாறிய நிலையில், தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் மார்னஸ் லபுசேங் (104 ஓட்டங்கள்) பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்போது அவுஸ்திரேலிய அணி 204 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஷ் ஹெட் 12 ஓட்டங்களுடன் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் போவ்ல்ட் முறையில் ஆட்டமிழக்க, கிரிஸ் கிரீனின் விக்கெட்டினையும் பிரபாத்

ஜயசூரிய கைப்பற்றினார். எனினும், அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து ஓட்டங்களை குவிக்க தொடங்கினார்.

இதில் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய 28வது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து இன்றைய ஆட்டநேர நிறைவில் 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், அலெக்ஸ் கேரி 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அறிமுகப்போட்டியில் விளையாடிய பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கசுன் ராஜித மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<