சுவீடனின் ஸ்டோக்ஹோல்மில் நேற்று இரவு (30) நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
போட்டியை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 10.21 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் 8ஆவது அத்தியாயம் சுவீடனின் ஸ்டோக்ஹோல்மில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் நேற்று நடைபெற்றது.
உலகின் முன்னணி மெய்வல்லுனர் பலர் பங்குகொண்ட இப்போட்டியில் இத்தாலியில் அண்மைக்காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றவரும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தவருமான யுபுன் அபேகோன் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டார்.
இதன்படி, தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே, பிரித்தானியாவின் ரீஸ் ப்ரெஸ்கோட் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட யுபுன், 10.21 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பிடித்தார்.
எவ்வாறாயினும், போட்டியை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 3ஆவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
எனினும், காற்றின் வேகம் 0.5 எதிர்த்திசையில் இருந்ததால் அவரது இந்த நேரப்பெறுமதி பெரும் பாராட்டைப் பெற்றது.
இறுதியாக நோர்வேயின் ஒஸ்லோவில் கடந்த மாதம் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் பங்குகொண்ட யுபுன், 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இந்த மாதம் அமெரிக்காவின் ஒரிகனில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கும் தகுதி பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டருக்கு தகுதி பெற்ற முதல் தெற்காசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இதனிடையே, குறித்த போட்டியில் முதலிடத்தை தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே (10.02 செக்.) பெற்றுக்கொள்ள, பிரித்தானியாவின் ரீஸ் ப்ரெஸ்கோட் (10.15 செக்.) இரண்டாவது இடத்தையும், பிரான்ஸின் விகோட் ஜிம்மி (10.19 செக்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<