உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையிலிருந்து மூவர்

World Athletics Championship 2022

204

அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இலங்கையிலிருந்து மூன்று வீரர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, ஆண்களுக்கான 100 மீட்டரில் யுபுன் அபேகோன், பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க மற்றும் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கயன்திகா அபேரட்ன ஆகிய மூன்று வீரர்களும் இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

18ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அமெரிக்காவின் ஒரிகனில் நடைபெறவுள்ளதுடன், குறித்த தொடருக்கு தகுதி பெறுவதற்கான இறுதி திகதி இம்மாhதம் 26ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், குறித்த தொடருக்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து முன்னணி வீரர்கள் கடந்த சில மாதங்களாக உள்ளுர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்படி, இத்தாலியில் வாழ்ந்து வருகின்ற இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்காக தெரிவு செய்யப்படுகின்ற 48 வீரர்களில் 42ஆவது இடத்தைப் பிடித்து ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

அண்மைக்காலமாக உலகின் பல்வேறு சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்து வருகின்ற யுபுன், இறுதியாக கடந்த 16ஆம் திகதி நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு 5ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார்.

இதனிடையே, இலங்கையின் முன்னணி வீராங்கனைகளான நிலானி ரத்நாயக்க, பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்ற 45 வீராங்கனைகளில் 38ஆவது இடத்தையும், கயன்திகா அபேரட்ன பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்ற 48 வீராங்கனைகளில் 42ஆவது இடத்தையும் பிடித்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்கவும், பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வாவும் தத்தமது போட்டி நிகழ்ச்சிகளுக்கான உலக தரவரிசையில் முதல் 45 வீரர்களுக்குள் இடம்பெறாத காரணத்தால் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான வாய்ப்பை தவறவிட்டனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<