வறுமைக்கு மத்தியில் சாதிக்க துடிக்கும் சதாசிவம் கலையரசி

260
The story of cricket girl from Kilinochi
@Meera Srinivasan

இலங்கையினைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டில் பெண்களின் பிரவேசம், ஆண்வீரர்களுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவில் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் தமிழ் பேசும் வீராங்கனைகளை நோக்கும் போது மிகவும் குறைந்த அளவிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.

>> ஒருநாள் தொடரிலும் சாதிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி?

ஆனால் சாதனைக்கு எதுவும் தடையில்லை என நிரூபித்திருக்கின்றார் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த சதாசிவம் கலையரசி. உள்நாட்டு யுத்தம் மூலம் பாதிக்கப்பட்ட தனது பிரதேசத்தில் இருந்து கலையரசி தனது கடின முயற்சிகள் மூலம் 19 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் எதிர்பார்க்கை குழாத்தில் (Provisional Squad) வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.

தனக்கு எதிர்காலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்வதே கனவு எனக் கூறும் கலையரசி, அதற்கான முதல் படியாக 19 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் எதிர்பார்க்கை குழாத்தில் இணைந்திருக்கின்றார்.

”எனது தந்தையே கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தியதோடு, எனக்கான ஆதரவினையும் வழங்கியிருந்தார். நான் இங்கே இருப்பதற்கு அவரே காரணம்.” என சதாசிவம் கலையரசி The Hindu செய்திச் சேவைக்கு வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலையரசிக்கு அவரது அப்பா தினக்கூலியாக இருந்தே, கிரிக்கெட் விளையாட்டிற்கான ஆதரவினை வழங்கியதோடு, அந்த ஆதரவு அவரினை இன்று தேசிய அணிக்கு அழைத்துச் செல்வதற்கான வாயிலையும் திறந்து வைத்திருக்கின்றது.

கிரிக்கெட் மாத்திரமில்லாது சிறு வயதில் இருந்தே அனைத்துவகையான விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்டிய சதாசிவம் கலையரசி, தற்போது வேகப்பந்துவீச்சாளராக கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்து வருவதோடு, அதிரடியான முறையில் துடுப்பாடியும் வருவதாக, கலையரசியின் பயிற்சியாளராக காணப்படும் ஜீவரத்தினம் பிரியதர்ஷன் குறிப்பிட்டார்.

”அவர் (கலையரசி) உறுதியான ஒரு வேகப்பந்துவீச்சாளர், நம்பிக்கையுடனும் தொடர்ச்சியாகவும் சிறந்தமுறையில் காணப்படுகின்றார். அத்துடன் அவரின் துடுப்பாட்டமும் முன்னேறியிருக்கின்றது. நான் விளையாடுகின்றவாறு அவரும் துடுப்பாடுவதனை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. அத்துடன் அது நாளுக்கு நாள் முன்னேறுகின்றது.“

தற்போது 16 வயதினை அடைந்திருக்கும் சதாசிவம் கலையரசி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக காணப்படும் சமரி அத்தபத்துவினை தனக்கு முன்னுதாரணமாக எடுப்பதாக குறிப்பிட்டதோடு, அவரைப் போன்று எதிர்காலத்தில் விளையாட விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

>> சமநிலை அடைந்த 11ஆவது இந்துக்களின் பெரும் சமர்

தனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே தேசிய அணிக்கான முதற்கட்ட வாய்ப்பினை பெற்றிருக்கும் கலையரசி, இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு நேரடியாக தெரிவாகும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொழில்முறைரீதியிலான (Professional) கிரிக்கெட் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் சதாசிவம் கலையரசி தனது தொடர் முயற்சிகளின் மூலம் தேசிய கிரிக்கெட் அணியில் சாதிக்க ThePapare.com உம் தமது வாழ்த்துக்களையும், ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கின்றது.

செய்தி மூலம்: The Hindu

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<