சமநிலை அடைந்த 11ஆவது இந்துக்களின் பெரும் சமர்

437

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகள் இடையிலான 11ஆவது இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியானது சமநிலை அடைந்திருக்கின்றது.

>>இந்துக்களின் பெரும் சமரில் சம பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகள்

இரண்டு நாட்கள் கொண்ட இந்த பெரும் சமர் கிரிக்கெட் போட்டியானது யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஆரம்பமாகியது.

போட்டியின் முதல் நாள் நிறைவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் (230) துடுப்பாட்டத்தினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் நின்ற R. டிலுக்ஷன் 34 ஓட்டங்களையும், சகீரதன் 18 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி 56 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 146 ஓட்டங்களை எடுத்தது.

கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் R. டிலுக்ஷன் 40 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் S. பரதுவஷன் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், L. பிரியன்தன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர் 84 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியானது 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

இம்முறை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் S. சுபர்ணன் 31 ஓட்டங்களைப் பெற்றிருக்க, T. கஜான்த் 30 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார். கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் K. சதுர்ஷன் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 202 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடங்கிய கொழும்பு இந்துக் கல்லூரி அணியானது, யாழ்.வீரர்களின் அபார பந்துவீச்சு காரணமாக  தடுமாற்றமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

>>மூன்றாவது LPL தொடர் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

எனினும் போராட்டமான துடுப்பாட்டத்துடன் இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவடையும் வரை கொழும்பு இந்துக் கல்லூரி அணி காணப்பட போட்டி சமநிலை அடைந்தது. அதேவேளை கொழும்பு இந்துக் கல்லூரி அணியானது இரண்டாம் நாள் ஆட்டநிறைவின் போது 31 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது.

கொழும்பு அணியினை அச்சுறுத்திய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சர்ஜன் வெறும் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 230/10 (59.3) சம்சன் 77, L.பிரியந்தன் 58, T.கிருஷ்ணாத் 30*, R. சகிதரன் 5/56

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 146 (56) R. டிலுக்ஷன் 40, S. பரதுவஷன் 4/33, L. பிரியன்தன் 3/15, T. கஜான்த் 2/39

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 117/6 (29) S. சுபர்ணன் 31, T. கஜான்த் 30*, K. சதுர்ஷன் 2/46

கொழும்பு இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 67/8 (31) L. கவிஷ்கரன் 27, சர்ஜன் 5/26

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<