கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்று வருகின்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது நாளான இன்று (08) மேலும் 2 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
20 வயதின்கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 52.11 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் அம்பகமுவ மத்திய கல்லூரி வீரர் தனுக தர்ஷன புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.
அதே வயதுப்பிரிவில் பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட கண்டி மகளிர் உயர்தர கல்லூரி மாணவி அமேஷா ஹெட்டியாரச்சி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை 14.86 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.
முன்னதாக நேற்று (07) நடைபெற்ற 20 வயதின்கீழ் பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடமும் 01.04 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டி சாதனை படைத்த அமேஷா ஹெட்டியாரச்சி, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியை ஒரு நிமிடமும் 01.40 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
எனவே, இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இரண்டு போட்டிச் சாதனைகளை முறியடித்தவராக அவர் இடம்பிடித்தார்.
- கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி அபிலாஷினி புதிய சாதனை
- கனிஷ்ட மெய்வல்லுனரில் மிதுன், அபினயன், ஜதூஷிகாவுக்கு தங்கம்
நேற்று நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டி தகுதிச்சுற்றை 14.14 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டி சாதனை படைத்த றோயல் கல்லூரி வீரர் நதுன் பண்டார, இன்று (08) நடைபெற்ற இறுதிப்போட்டியை 14.24 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதனிடையே, அண்மைக்காலமாக தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஜொலித்து வருகின்ற ஒருசில கனிஷ்ட வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதில் பெண்களுக்கான 200 மீட்டரில் தேசிய சம்பியனாக வலம்வருகின்ற மேதானி ஜயமான்ன, இன்று நடைபெற்ற 23 வயதின்கீழ் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 25.09 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.
அதேபோன்று, பெண்களுக்கான 800 மீட்டரில் பிரகாசித்து வருகின்ற வலள ஏ ரத்னாயக்க கல்லூரி வீராங்கனை தருஷி கருணாரத்ன, இன்று நடைபெற்ற 20 வயதின்கீழ் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 10.18 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.
நாளை (09) போட்டியின் மூன்றாவது நாளாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<